உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தண்ணீர் வராத ஜல் ஜீவன்திட்டம்: ரோடு இல்லாத தெருக்கள்

தண்ணீர் வராத ஜல் ஜீவன்திட்டம்: ரோடு இல்லாத தெருக்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சுப்புராஜ் நகரில் ஜல் ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குழாய்களில் தண்ணீர் வராமலும், பல ஆண்டுகளாக ரோடு இல்லாமல் தெருக்களில் நடக்க முடியாத அவதியிலும் மக்கள் உள்ளனர்.அருப்புக்கோட்டை நகராட்சி 36 வது வார்டை சேர்ந்தது சுப்புராஜ் நகர். இங்கு 10 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகர் உருவாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. 10, 11 வது தெருக்களில் ரோடு இல்லாமல் பள்ளமாக உள்ளது. தெருக்களில் வாறுகால் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆங்காங்கு தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றமும் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.தெருக்களில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் குழாய்களில் தண்ணீர் வருவது இல்லை. இப்பகுதி மக்கள் தண்ணீரை விலை கொடுத்து தான் வாங்க வேண்டியுள்ளது. ரோடு இல்லாததால் தனியார் வண்டிகள் தெருக்களுக்குள் வர சிரமப்படுகின்றன. இந்தப் பகுதியில் பொது கழிப்பறைகள் இல்லை. தும்பை குளம் கண்மாய் அருகில் நகராட்சி மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுக்கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.பயன்பாட்டிற்கு வராமல் மூடிய நிலையில் உள்ளது. மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நவீன சுகாதார வளாகமும் கட்டித் தர வேண்டும். தும்பை குளம் கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது.கண்மாய்க்கு வரும் மழை நீர் வரத்து ஓடைகள் அடைபட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் கண்மாய் நிறைந்து மழையில் நீர் மறுகால் ஓடையில் செல்ல முடியாத நிலையில் வெள்ளம் நகருக்குள் வந்து விடுகிறது. கண்மாயை தூர்வாரி மடைகளை சரி செய்து கரைகளை உயர்த்த வேண்டும்.

விலைக்கு வாங்கும் குடிநீர்

உமாமகேஸ்வரி, குடும்பத்தலைவி: சுப்புராஜ் நகரில் நகராட்சி குடிநீர் வருவது இல்லை. ஒரு ஆண்டிற்கு முன்பு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை குடிநீர் வரவில்லை. தண்ணீர் வராமலேயே குழாய்கள் சேதம் அடைந்தது. குடிநீரை அதிக விலை கொடுத்து தான் வாங்குகிறோம். எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி நகராட்சி செய்து தர வேண்டும்.

பள்ளமான ரோடு

சுதா, குடும்பத்தலைவி: சுப்புராஜ் நகரில் பல தெருக்களில் ரோடுகள் இல்லை. மழைக்காலத்தில் சேறும், சகதியிலும் நாங்கள் நடக்க வேண்டி உள்ளது. டூவீலர்களில் செல்ல முடிவதில்லை. ஆட்டோக்கள் வருவது இல்லை. வயதானவர்கள் மேடும் பள்ளமுமாக உள்ள தெருவில் நடக்க சிரமப்படுகின்றனர். பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.

வளர்ச்சிப் பணிகள் இல்லை

முத்துக்குமார், தனியார் ஊழியர்: சுப்புராஜ் நகர் உருவாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எந்தவித வளர்ச்சி பணிகளும் செய்யப்படவில்லை. நகராட்சிக்கு தேவையான அனைத்து வரிகளையும் முறையாக கட்டுகிறோம். ஆனால் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இது குறித்து நகராட்சியில் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் பயன் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !