மேலும் செய்திகள்
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
21-Apr-2025
விருதுநகர் ''ஒரு பெண் வாழ்வில் முன்னேற வேண்டுமெனில் கல்வி கற்க வேண்டும்.'' என பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பேசினார்.விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரியில் பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தப்படுவதை தடுத்தல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயக்குமார் வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் துவக்கவுரை நிகழ்த்தினார்.உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பேசியதாவது: பெண்களை சக்தியாக, தாயாக மதிப்பவர்கள் அவர்களுக்கான வாய்ப்பையும், அங்கீகாரத்தையும் கொடுப்பதில்லை. உசிலம்பட்டியில் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்துக் கொன்ற காலங்களும் இருந்தன. அவர்களை எப்படி வளர்ப்பது என்ற பயத்தில் பெற்றோர்களே கொன்ற சரித்திரமும் உண்டு.இச்சூழல் தற்போது மாறி, பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். ஒரு பெண் வாழ்வில் முன்னேற வேண்டுமெனில் கல்வி கற்க வேண்டும். இந்தாண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் 28 சதவீதம் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.போக்சோ வழக்குகளில் ஆசிரியர்களே பெண் குழந்தைகளை துன்புறுத்துவதை பார்க்க முடிகிறது. பணியிடங்களிலும், படிக்கும்இடங்களிலும் பல்வேறு கஷ்டங்களையும் தாண்டி தான் பெண்கள் சாதிக்கின்றனர். ஒவ்வொரு அரசுத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது, என்றார்.கலெக்டர் ஜெயசீலன், எஸ்.பி., கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். வழக்கறிஞர் சிவக்குமார், உதவி பேராசிரியர்கள் ஏஞ்சல் ராணி, சங்கீதா, எழுத்தாளர் மணிமாதவி சிவகணேஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.ஸ்ரீவில்லிப்புத்துார் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் வீரணன் நன்றி கூறினார்.
21-Apr-2025