கே. கரிசல்குளம் கண்மாயில் சேதமான மடைகளை சீரமைக்க வலியுறுத்தல்
காரியாபட்டி: கே. கரிசல்குளம் கண்மாயில் சேதமடைந்துள்ள மடைகளை சீரமைக்க விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.காரியாபட்டியில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் தங்கம், துணை செயலாளர்கள் கனகசபாபதி, கருப்பசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், காரியாபட்டி பேரூராட்சியிலிருந்து வெளியேறும் ஒட்டு மொத்த கழிவு நீரும் தோப்பூர் கண்மாயில் விடப்படுகிறது. கழிவு நீர் விடுவதால் நிலத்தடி நீர் மாசுபட்டும், நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி கழிவுநீரையும், குப்பைகள் கொட்டுவதையும் நிறுத்த வேண்டும். கே. கரிசல்குளம் கண்மாயில் 4 மடைகள் சேதமடைந்து கிடக்கிறது. ஒரு மடையில் தண்ணீர் எப்போதும் வெளியேறிக் கொண்டிருக்கிறது. மழை நீரை சேமிக்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.