விருதுநகர்:விருதுநகர் நகராட்சியின் காமராஜர் பைபாஸ் ரோடு முழுவதும் சேதமாகி பள்ளங்களாக உள்ளது. வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாமல் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் தினசரி உயிர் பயத்துடன் பயணிக்கின்றனர்.
விருதுநகர் நகராட்சியில் சாத்துார் செல்லும் ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் ரோட்டை இணைப்பதற்காக காமராஜர் பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. இதனால் அருப்புக்கோட்டை செல்லும் வாகனங்கள், அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எளிதாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வர முடிந்தது.ஆனால் தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட நாள் முதல் சாரல் மழை பெய்தால் கூட சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி வாகனங்கள், சைக்கிள், நடந்து செல்பவர்கள் சென்று வருவதில் சிரமம் நீடித்து வருகிறது.மேலும் நகராட்சி நிர்வாகத்தால் முறையாக அமைக்கப்படாத பாதாளச்சாக்கடை திட்டத்தால் ஒவ்வொரு முறையும் மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஆறாக ஓடுகிறது. தார் ரோடு அமைத்து பல மாதங்களை கடந்து விட்டதாலும், கனரக வாகனங்கள் அதிகம் சென்று வருவதாலும் காமராஜர் பைபாஸ் ரோடு குண்டும், குழியுமாக மாறிவிட்டது.இந்த பள்ளங்களில் கழிவு நீர், மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தினமும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் ரோட்டை சீரமைக்கவும், புதிதாக அமைக்கவும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இவ்வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. வாகன ஓட்டிகள் பள்ளங்களாக உள்ள ரோட்டை கடந்து செல்லும் போது விபத்து, முதுகு வலி உள்பட பல்வேறு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பள்ளங்களின் மீது கிராவல் மண்ணை போட்டு தற்காலிக சீரமைப்பு செய்வதற்கு கூட நகராட்சி நிர்வாகம் தயராக இல்லை.இப்பகுதியில் இரவில் வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் இவ்வழியாக வரும் வாகனங்கள் சகதியில் சிக்கி நகர்ந்து செல்வதற்கே சிரமப்படுகின்றன. நகரின் பல பகுதிகளில் தற்போது சிறு பாலம், தரைப்பாலம் கட்டும் பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதை மாற்றி விட்டு வாகன ஓட்டிகளை அல்லல்படுத்துகின்றனர். மாவட்ட தலைநகருக்கு தகுதியில்லாத நகராட்சி என அனைத்து மக்களும் குற்றம்சாட்டும் நிலைக்கு உருவாகியுள்ளது.சீரமைப்பு இல்லாததால் அவதி
காமராஜர் பைபாஸ் ரோடு பல மாதங்களாக பள்ளங்களால் நிறைந்துள்ளது. வாகன ஓட்டிகள் இரவில் ரோட்டை கடந்தும் செல்லும் போது பலர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பலருக்கு அன்றாட வாழ்க்கை சிரமமாக மாறியுள்ளது.
-கணேசன்
டிரைவர், விருதுநகர்.உயிருக்கு அச்சுறுத்தல்
இவ்வழியாக செல்லும் வாகனங்களில் அதிகமானவை டூவீலர்கள், லோடு ஆட்டோக்கள், கனரக வாகனங்கள். அருப்புக்கோட்டை, அல்லம்பட்டிக்கு செல்லும் முக்கிய ரோடாக எப்போதும்
போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருந்தும் நகராட்சி நிர்வாகம் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.
பாலகிருஷ்ணன்,
ஓய்வு அரசு ஊழியர், விருதுநகர்.ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்நகராட்சி பகுதியில் பல்வேறு கட்டுமானப்பணிகள் நடப்பதால் காமராஜர் பைபாஸ் ரோட்டில் பள்ளங்கள் இருக்கும் இடங்களில் விரைவில் கான்கீரிட் கொட்டி சீரமைப்பு பணிகள் செய்யப்படும்- ஆர்.மாதவன், நகராட்சி சேர்மன், விருதுநகர்.