விவசாய தொழிலாளர்களை வழி மறிக்கும் திருடர்கள் அச்சம்; போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த எதிர்பார்ப்பு
மாவட்டத்தில் வீடு புகுந்து திருடுவது, டூவீலர் திருட்டு, வழிப்பறி, பஸ்சில் பயணிப்பவர்களிடம் திருடுவது, நகை, துணிக்கடை என பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போலீசார் முழுமையாக கண்காணிக்க முடியாத காரணத்தால் உதவியாக இருக்க ஆங்காங்கே சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஓரளவுக்கு திருட்டு சம்பவங்கள் கட்டுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் திருட்டு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து அதிகாலையில் காய்கறிகள், பழ வகைகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் விவசாயிகள், பால் கறக்க செல்லும் தொழிலாளர்களை கண்காணித்து வழிமறித்து தாக்கி அலைபேசி, பணத்தை பறித்து செல்கின்றனர். தற்போது விவசாயிகள் அதிகாலையில் விளை பொருட்களைக் கொண்டு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். அதேபோல் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் வேலை முடித்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது வழி மறித்து தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு பயந்து கொண்டு, இரவு முழுவதும் கம்பெனிக்கு அருகில் தங்கி காலையில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. குறிப்பாக நரிக்குடி, காரியாபட்டி ரோட்டில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு மனைவியை ஏற்றிக்கொண்டு டூவீலரில் சென்றவரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டியது. பயத்தில் அதிவேகமாக டூவீலரை விரட்டிச் சென்று ஊருக்குள் நுழைந்து தப்பியதால், அக்கும்பல் பிடிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். இது போன்ற சம்பவங்களால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அப்பகுதியில் தொடர்கதையாக நடந்து வருவதால் அந்த வழியாக போவோர் வருவோர் அச்சத்துடன் செல்கின்றனர். இரவு, அதிகாலை நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.