ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் மூலத்திற்கு லேசர் சிகிச்சை
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் குழுவினர் மூலத்திற்கு லேசர் சிகிச்சை அளித்தனர்.ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக மூல நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். டாக்டர்களின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து மருத்துவத் துறை இணை இயக்குனர் பாபுஜி, தலைமை மருத்துவர் காளிராஜின் மருத்துவ ஆலோசனையில் டாக்டர் அருண் தங்கமணி, மயக்கவியல் டாக்டர் நாராயணன் குழுவினர் பெண்ணிற்கு லேசர் மூலம் சிகிச்சை அளித்தனர். அவர் தற்போது நல்ல உடல் நிலையில் உள்ளார்.இது குறித்து டாக்டர் அருண் தங்கமணி கூறுகையில், மூலம், பவுத்திரம், பிளவு, வெடிப்பு போன்ற நோய்களுக்கு இதுவரை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவம் செய்யப்பட்டு வந்தது. தற்போது லேசர் தொழில்நுட்பத்தால் கத்தி இல்லாமல், அதிக ரத்த கசிவு ஏற்படாமல் சிகிச்சை அளித்துள்ளோம். இதன் மூலம் சீக்கிரம் குணமடைந்து வழக்கமான வாழ்க்கை சூழலை அவர்கள் மேற்கொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் மட்டுமே இத்தகைய லேசர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றார்.