உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின் வெட்டினால் காய்ந்துபோன பயறு செடிகள்

மின் வெட்டினால் காய்ந்துபோன பயறு செடிகள்

சேத்துார் : சேத்துார் அருகே தேவதானம் விவசாய விளை நிலத்தில் 15 நாட்களாக தொடர் மின்வெட்டினால் சாகுபடியான கடலை பயறு வகைகள் பலனை எட்டாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை கோழிப்பண்ணை செல்லும் பாதையில் தென்னை, மா, கொய்யா, பயறு வகை உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் கோவிலுாரை சேர்ந்த துரைப்பாண்டி 10 ஏக்கர் சாகுபடியில் இரண்டு ஏக்கர் தென்னை மீதி இடத்தில் பாசிப்பயறு, நிலக்கடலை, உளுந்து என மாற்று விவசாயம் செய்து வந்தார். வற்றாத கிணறு இருந்த நிலையில் 120 நாள் பயிரான நிலக்கடலை காய் படிப்பில் கடைசி கட்டத்தை எட்டி இருந்தது. பாசிப்பயறு, உளுந்தும் பூ பிடிக்கும் பருவம் வந்து காய் பிடிக்கும் வேளையில் 15 நாட்களாக மின் சப்ளை இல்லை. இதனால் அறுவடை பயிர்களும் காய் பிடிப்பை எட்டியுள்ள பயறு வகைகளும் பாதிப்பை எட்டியுள்ளது. இது குறித்து விவசாயி துரைப்பாண்டி: நிலக்கடலைக்கு ஏக்கர் 18,000, பாசிப்பயறு 7 ஆயிரம், உளுந்து 4ஆயிரம் என மொத்தம் 75 ஆயிரம் செலவிட்டு அறு வடைக்கு 20 நாள் உள்ள நிலையில் கிணற்றில் தண்ணீர் இருந்தும் நீர்பாய்ச்ச முடியாது பயிர்கள் தலை சாய்ந்து விட்டது. இதனால் ரூ. 2.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்தின் மெத்தனத்தால் வழியின்றி தவிக்கிறேன். அருகிலுள்ள தென்னை விவசாயிகளும் நீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஜெயகிருஷ்ணன், உதவி மின் பொறியாளர், தளவாய்புரம்: மூன்று நாட்களாக பலத்த காற்று பாதிப்பால் தேவதானம் வனப்பகுதிக்குள் வரும் உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் இரண்டு உடைந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மின்கம்பிகளில் மரங்கள் சாய்ந்தும், மட்டைகள் விழுந்தும் சேதம் உள்ளதால் விபத்தை தவிர்க்க சப்ளையை நிறுத்தி பணிகள் நடக் கிறது. 15 நாட்கள் என்பதை அதிகரித்து கூறுகின்றனர். போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ