உள்ளூர் செய்திகள்

கண்மாய் காப்போம்

சிவகாசி: கண்மாய் முழுவதும் சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு, மதகுகள் சேதம் போன்றவற்றால் திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் 150 ஏக்கர்பரப்பளவு கொண்டது. 200 ஏக்கர் பாசன வசதி கொண்ட கண்மாயை நம்பி திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, ஆனைக்குட்டம் கிராம விவசாயிகள் நெல், சோளம், வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிடுகின்றனர். கிணற்று பாசனத்தின் மூலம் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கும் தண்ணீர் ஆதாரமாக கண்மாய் விளங்குகிறது. மேலும் திருத்தங்கல் நகர் முழுவதற்கும் தண்ணீர் தேவையை இந்த கண்மாய்தான் பூர்த்தி செய்கிறது.இக்கண்மாயில் 30க்கும் மேற்பட்ட போர்வெல் அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றது. விவசாயத்திற்கும் குடிநீர் ஆதாரத்திற்கும் பயன்பட்டு வந்த பெரியகுளம் கண்மாய் தற்போது கோரைப் புற்கள், சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. கண்மாயில் உள்ள மூன்று மதகுகளுமே சேதம் அடைந்து இருப்பதால் மழை பெய்து தண்ணீர் வந்தாலும் சேமிக்க முடியவில்லை. கண்மாய்க்கு பழைய வெள்ளையாபுரத்தில் இருந்து வருகின்ற வரத்துக் கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. ஆனால் கால்வாய் முழுவதுமே புதர்கள் சூழ்ந்து தண்ணீர் வர வழி இல்லை. தவிர ஓடை அருகே தீப்பெட்டி ஆலையின் கழிவுகளும் ஓடை வழியாக கண்மாயில் கலப்பதால் தண்ணீரை விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை.பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வருவதற்காக 30 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பட்டி அருகே அர்ஜுனா நதியில் இருந்து ஓடை உருவாக்கப்பட்டது. ஆனால் முறையாக பணிகள் நடைபெறாததால் இதுவரையிலும் தண்ணீர் வரவே இல்லை. இதனால் கண்மாயின்நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கண்மாய் கரைகள் பலவீனமாக உள்ளது. பெரியகுளம் கண்மாயிலிருந்து உறிஞ்சி குளம் கண்மாய் செல்லும்ஓடையை துார்வார வேண்டும்.தர்மர், விவசாயி: மேட்டுப்பட்டியில் இருந்து அர்ஜுனா நதி வழியாக அமைக்கப்பட்ட ஓடை வீணாகிவிட்டது. எனவே இதே ஓடையை நமஸ்கரித்தான் பட்டி, வெள்ளையாபுரம் வழியாக பெரியகுளம் கண்மாய் செல்லும் ஓடையோடு இணைக்க வேண்டும். இதனால் அர்ஜுனா நதி மூலமாக மட்டுமின்றி, மழை பெய்யும் போதும் ஓடை வழியாக பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்கும்.விக்னேஷ், விவசாயி: கண்மாயை நம்பித்தான் இப்பகுதியில் வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. ஏனெனில் கிணற்று பாசனத்திற்கு தண்ணீர் ஆதாரமாக உள்ளது. எனவே கண்மாயை முழுமையாக துார்வார வேண்டும். சேதம் அடைந்துள்ள மதகுகளை சீரமைக்க வேண்டும்.வேல்முருகன், விவசாயி: கண்மாய் முழுவதுமே கோரைப் புற்கள், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. தவிர கரைகள்பலவீனம் அடைந்துள்ளது.எனவே கரைகளைப் பலப்படுத்த வேண்டும். பெரியகுளம் கண்மாயில்இருந்து உறிஞ்சிகுளம் கண்மாய் செல்லும் ஓடையை துார்வார வேண்டும்.சுப்புராஜ்: திருத்தங்கல் நகருக்கு புழக்கத்திற்கான தண்ணீர் தேவை பெரிய கண்மாய் மூலமாகத்தான் கிடைக்கின்றது. இதற்காக கண்மாயில் போர்வெல் போடப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால் கண்மாயில் தண்ணீர் தேங்குவதற்கு வழி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை