உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளிகளில் சரிவர நடைபெறாத வகுப்பு நூலகம்.. கவனம் அவசியம்! குறைந்து வரும் மாணவர்களின் வாசிப்பு திறன்

பள்ளிகளில் சரிவர நடைபெறாத வகுப்பு நூலகம்.. கவனம் அவசியம்! குறைந்து வரும் மாணவர்களின் வாசிப்பு திறன்

மாவட்டத்தில், உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க அரசு உத்தரவிட்டது. வாரத்தில் 1, 2 நாட்கள் விளையாட்டு, கைத்தொழில் கற்றுத்தர வகுப்புகள் இருப்பது போல், தினமும் ஒரு வகுப்பிற்கு ஒரு வகுப்பு நுாலகம் நடத்த, 5 ஆண்டுகளுக்கு முன் துவக்கியது. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே சிறப்பாக நடந்தது. அதற்குப்பின், ஒரு சில தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் சரிவர வகுப்பு நுாலகம் நடத்தப்படவில்லை. அனைத்து பள்ளிகளிலும் நுாலகங்கள் உள்ளன. வகுப்பு நுாலகம் நடத்த தனியாக கட்டடம் ஒதுக்கப்பட்டு ஓவியம் வரைதல், வரலாற்று தலைவர்கள் குறித்து குறிப்பு எழுதுவது, நீதிக் கதைகள், பொது நெறி கதைகள், பொது அறிவு, நாளிதழ்கள் கட்டாயம் வாங்கி வாசிப்புத் திறனை அதிகப்படுத்தி, ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் பாடப்புத்தகத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்கிற கடமையால், பெரும்பாலான பள்ளிகளில் இதனை கண்டும் காணாமல் விட்டு விட்டனர். ஒவ்வொரு புத்தகத்திலும் 12 முதல் 15 வரை பாடங்கள் நடத்த வேண்டி இருப்பதால், 2 ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக ஆசிரியர்கள் புலம்பினர். மேலும் பள்ளிகளில் கூடுதலாக கலைத் திருவிழா நடத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டியிருப்பதால், வகுப்பு நுாலகம் நடத்துவது குறைந்து வருகிறது. இதையடுத்து, வாசிப்பு திறனை ஊக்குவிக்க, அதற்கு ஏற்ப சில பாட புத்தகங்களை அரசு குறைத்தது. அப்படி இருந்தும் சரிவர வகுப்பு நுாலகங்கள் நடைபெறாமல் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்து வருவதால் திறமை கேள்விக்குறியாகி உள்ளது. ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை இருப்பது என்னவோ உண்மைதான். தற்போது உள்ள காலத்திற்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அவ்வப்போது வகுப்பு நுாலகத்தை நடத்தி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ