உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மரங்கள் கணக்கெடுப்பில் கோட்டைவிடும் நகராட்சி வெட்டி தீர்த்து கட்டும் மின் ஊழியர்கள்

மரங்கள் கணக்கெடுப்பில் கோட்டைவிடும் நகராட்சி வெட்டி தீர்த்து கட்டும் மின் ஊழியர்கள்

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மரங்களை கணக்கெடுத்து வைத்துள்ளதா என ஆராய வேண்டும். மின் ஊழியர்கள் மழைக்கால பராமரிப்புக்காக மரங்களை தண்டு பகுதி வரைவெட்டுவது அதிகரித்துள்ளது. இதே பாணியை பயன்படுத்தி குடியிருப்போரும் இரவோடு இரவாக மரம் வெட்டுவது வாடிக்கையாகி வருகிறது.இதனால் நகர்ப்பகுதிகளில் அனுமதியின்றி மரம் வெட்டும் அபாயம் அதிகரித்துள்ளது.நகராட்சி பகுதியில் தன்னார்வலர்கள், மக்கள் என பல தரப்பு மக்களால் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வேம்பு, புங்கை, அரசு, கொன்றை, காகிதப்பூ, பூவரச மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதில் நெடுஞ்சாலைத்துறையின் மரங்களும் அடங்கும். இவற்றை முன்பு முறைப்படி நகராட்சி நிர்வாகம் முன்பு கணக்கெடுத்து வைத்திருந்தன. தற்போது இதை யாரும் கணக்கெடுப்பதில்லை. பருவநிலை மாற்றத்தால் மரக்கன்றுகள் நடுவது அதிகரித்து வருகிறது. ஐந்தாண்டுகள் முன்பு இருந்ததை விட மரங்களின் எணணிக்கை அதிகமாக உள்ளது. இவ்வாறு வளர்ந்துள்ள மரங்களை மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்கள் கிளைகளோடு வெட்டுவதை நிறுத்தாமல் தண்டு பகுதி வரை வெட்டி மொட்டையாக்குகின்றனர். இதனால் மரங்கள் மடிந்து விடும் அபாயம் உள்ளது.மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள பசுமை குழு அனுமதி அளித்த பின்பே மரங்களைவெட்ட முடியும். ஆனால் மின் பாதைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் மரக்கிளைகளை எவ்வித அனுமதியின்றி மின் ஊழியர்கள் வெட்டலாம்.ஆனால் தற்போதோ தண்டு பகுதி வரை மரங்களை முழுமையாக வெட்டுவது அதிகரித்துள்ளது. ரோடு விரிவாக்க பணியின் போது ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக 10 மரங்கள் நட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. அதே போல் மின் பாதையில் இடையூறு செய்த மரங்களை மொத்தமாக வெட்டினால் அதற்கு பதில் வேறு இடங்களில் கூடுதல் மரங்கள் நட நடவடிக்கை எடுப்பதும் தேவையாக உள்ளது. கணக்கெடுப்பு எதுவுமில்லாததால் இரவோடு இரவாக இடையூறு மரங்களை மக்களும் தங்கள் விருப்பத்திற்கேற்ப அனுமதி பெறாமல் வெட்டுவது அதிகரித்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ