உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இதமளிக்கும் ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் ஆறுதலடையும் நரிக்குடி நோயாளிகள்

இதமளிக்கும் ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் ஆறுதலடையும் நரிக்குடி நோயாளிகள்

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால், நல்ல காற்று, இதமான சூழ்நிலை ஏற்பட்டு, மனசு ஆரோக்கியமாக இருக்கும். எந்த ஒரு நோயும் அண்டாது. உடம்பும், மனசும் திடகாத்திரமாக இருக்கும். இதனை தெரிந்தும் பெரும்பாலானவர்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது கிடையாது. சிகிச்சைக்கு செல்லும் இடங்கள் இதமான சூழ்நிலையாக இருந்தால் நோய்களிலிருந்து விரைவில் மீள முடியும். பெரும்பாலான மருத்துவமனைகள் இட நெருக்கடியால் மரக்கன்றுகள் வளர்க்க முடியாமல் நெருக்கடி யான சூழ்நிலையில் இருக்கிறது. கிராமப்புறங்களில் போதிய இட வசதிகள் இருந்தும் மரக்கன்றுகளை வளர்த்து சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறை பெரும்பாலானவர்களுக்கு இருக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளாகம் முழுக்க மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக, பூங்கா போல் அமைத்துள்ளனர். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், வெயில் நேரங்களில் உட்கார்ந்து ஆறுதல் அடைகின்றனர். எப்போதும் குளுகுளுவென இதமான சூழ்நிலை இருந்து வருகிறது. நோயாளிகள் மன அமைதியுடன் வீட்டுக்கு திரும்புகின்றனர். வளாகம் முழுவதும் வேம்பு, புங்கை, வாகை, பூவரசு என பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளனர். நோயாளிகள் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது ஒரு பக்கம் இருந்தாலும், மனசுக்கு இதமான, இயற்கையான சூழ்நிலையால் விரைவில் குணமாகும் என்பதில் ஐயமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை