அரசு மருத்துவமனைக்கு புதிய ரத்த பரிசோதனை மெஷின் வருகை
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பெறப்பட்ட புதிய ரத்த பரிசோதனை மெஷின் மூலம் இனி வரும் காலங்களில் ஒரு மணி நேரத்தில் 640 பரிசோதனைகள் செய்ய முடியும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளது.விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 2 ஆயிரம் வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களுக்கான ரத்த பரிசோதனைகள் ஒரு மணி நேரத்திற்கு 100 என்ற எண்ணிக்கையில் செய்யப்படுகிறது. இதில் சிறுநீரகம், கல்லீரல், கொழுப்பு ஆகியவற்றின் மீதான தனித்தனி பரிசோதனை முடிவுகளை பெற ஒவ்வொருன்றிற்கும் 10 நிமிடங்கள் ஆகிறது.ஆனால் நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் புதிய மெஷின் தேவை ஏற்பட்டது. இதையடுத்து ஓ.என்.ஜி.சி., தொண்டு நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியில் நவீன புதிய ரத்த பரிசோதனை மெஷின் மருத்துவமனைக்கு பெறப்பட்டுள்ளது. இந்த மெஷினில் சிறுநீரகம், கல்லீரல், ரத்தம், கொழுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் ஒரே முடிவாக பெற முடியும்.இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 640 பரிசோதனைகள் செய்ய முடியும். இதனால் நோயாளிகளின் தேவை நிவர்த்தி அடைந்து தாமதமில்லா பரிசோதனைகளை செய்ய முடியும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.