உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதிய பஸ் ஸ்டாண்ட்கள் வெற்றிகரமாக செயல்பட தேவை சர்குலர் பஸ்கள்: ஆட்டோக்களில் அதிக கட்டணங்களால் மக்கள் தவிப்பு

புதிய பஸ் ஸ்டாண்ட்கள் வெற்றிகரமாக செயல்பட தேவை சர்குலர் பஸ்கள்: ஆட்டோக்களில் அதிக கட்டணங்களால் மக்கள் தவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாவட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட்கள் வெற்றிகரமாக செயல்படவும், மக்கள் எளிதில் வந்து செல்ல உதவும் வகையிலும் ஒவ்வொரு நகரிலும் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், ஆண்டுக்காண்டு குடியிருப்புகள் அதிகரித்து, நகர் எல்லைகள் விரிவடைந்து வரும் நிலையில், போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் புதிய பஸ் ஸ்டாண்ட்கள் அமைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தற்போதைய பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் எளிதாக வந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் இருப்பதால், பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே இறக்கிவிட்டும் செல்லும் நிலை காணப்படுகிறது. இதனால் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டுகளும் முழு அளவில் செயல்பட முடியாத நிலை இதுவரை இருந்து வருகிறதுதற்போது மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம் நகரங்களில் புதிய பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது. சிவகாசியில் பழைய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சாத்தூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு கட்டப்படும் புதிய பஸ் ஸ்டாண்ட்களுக்கு மக்கள் வந்து செல்ல மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தங்கள் குடியிருப்பு பகுதியில் செல்ல குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கூட ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் வெளியூர் சென்று திரும்பும் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் திருட்டு பயத்துடன் நடந்து செல்கின்றனர்.அதிலும் நான்கு வழிச்சாலை அமைந்துள்ள அருப்புக்கோட்டை, விருதுநகரில் பஸ் ஸ்டாண்டிற்குள் வெளி மாவட்ட பஸ்கள் வந்து செல்வது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பயணிக்கும் நிலை உள்ளது.எனவே, மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுகள், அரசு , தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், கோவில்கள், மார்க்கெட்டுகள் என அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 15 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதமும், இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை 30 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதமும் நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் இயக்கினால் மக்கள் சிரமம் குறையும்.சர்குலர் பஸ்கள் இயக்கப்படுவதால் நகரின் எந்த மூலையில் இருந்தும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வர முடியும் என்ற நிலை உருவாகும் பட்சத்தில் புதிய பஸ் ஸ்டாண்டுகள் வெற்றிகரமாக செயல்படும் என்பது தினசரி வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வியாபாரிகள், விற்பனை பிரதிநிதிகளின் யோசனையாகும்.இதற்கு மாவட்ட அரசு நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும், போக்குவரத்து கழகமும் இணைந்து சரியான திட்டமிடுதலுடன் சர்குலர் பஸ்களை இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ