உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்குதடையில்லா சான்றிதழ்கள் வழங்கல் அடுத்தாண்டு முதுநிலை மருத்துவம் துவக்கம்

புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்குதடையில்லா சான்றிதழ்கள் வழங்கல் அடுத்தாண்டு முதுநிலை மருத்துவம் துவக்கம்

விருதுநகர்: தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் மாசுகட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணி, தீயணைப்பு, நகராட்சி, மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழ்கள் பெறப்படாமல் மூன்று ஆண்டுகளாக செயல்பட்டது. தினமலர் செய்தி எதிரொலியாக தற்போது தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அடுத்தாண்டு முதல் முதுநிலை மருத்துவப்படிப்பு சேர்க்கை துவங்கப்படவுள்ளது. தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளின் பணிகள் துவங்க மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ், பணிகள் முடிவடைந்த பின் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து பணிகள் முழுமை பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் தீத்தடுப்பு வசதிகள், தீயணைப்பு வாகனங்களின் மீட்பு பணிகளுக்கு தேவையான இடவசதிகள் வளாகத்தில் இருப்பதை ஆய்வு செய்து தடையில்லா சான்றிதழ், கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதற்கான நகராட்சி, மாநகராட்சியின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லுாரிகளில் கட்டுமான பணிகளை செய்த நிறுவனம் பணிகளை முறையாக முடித்ததால் அனைத்து தடையில்லா சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் பணிகளை செய்த ஒப்பந்த நிறுவனம் பணிகளை முடிக்காமல் அவசர கதியில் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இக்கட்டடங்களை பொதுப்பணித்துறை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கவில்லை. தீயணைப்பு, நகராட்சி, மாநகராட்சியால் வழங்கப்படும் எந்த சான்றிதழ்களும் இல்லாமல் மூன்று ஆண்டுகளை கடந்து 11 புதிய அரசு மருத்துவமனைகளும் இயங்கி வந்தன. இது குறித்து மே 28ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணி, தீயணைப்பு, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு அனைத்து தடையில்லா சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு புதிய மருத்துவக்கல்லுாரிக்கு தலா 24 முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான இடங்கள் துவங்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் அடுத்தாண்டு முதல் முதுநிலை மருத்துவப்படிப்பு சேர்க்கை துவங்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ