புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் ஐ.டி., ஒருங்கிணைப்பாளர்கள் இல்லை கணினிமயமாக்கல் பணிகள் பாதிப்பு
விருதுநகர்: தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுகாரிகளில் ஐ.டி., ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படாததால் கணினி மயமாக்கல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் 2022 ஜன., 12ல் திறக்கப்பட்டன. இவை செயல்பாட்டிற்கு வந்த நாள் முதல் தற்போது வரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இங்கு மருத்துவமனை மேலாண்மை திட்டம் என்ற கணினிமயமாக்கல் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதில் விருதுநகர், கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளில் ஏற்கனவே எச்.எம்.ஐ.எஸ்., 2.0 என்ற மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.தற்போது ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரிகளில் சிடாக் 3.0 என்ற மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இதன் மூலம் நோயாளிகள் பதிவில் துவங்கி டாக்டர்கள் வருகை, கிடங்கில் மருந்துகள் கையிருப்பு, மகப்பேறு மருத்துவமனையின் செயல்பாடு என மருத்துவக்கல்லுாரியின் அனைத்தும் கணினி மயமாக்கப்படவுள்ளது.ஆனால் இவற்றை செயல்படுத்த புதிய மருத்துவக்கல்லுாரிகளில் ஐ.டி., ஒருங்கிணைப்பாளர்கள் இல்லை. மாறாக பக்கத்து மாவட்டங்களில் பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளது.இதனால் இரண்டு மருத்துவக்கல்லுாரிகளின் பிரச்னையை ஒரு ஆளாக கவனிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் கணினி மயமாக்கல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.