பழனிசாமி கூட்டத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து ஒருவர் பலி
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கோடாங்கி பட்டியில் டூவீலர் மீது வேன் மோதி கவிழ்ந்ததில் சாத்துாரில் நடந்த அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி பொதுக்கூட்டத்திற்கு சென்ற 8 பேர் காயமடைந்தனர். டூவீலரில் வந்த சிவகாசி துரைச்சாமி புரத்தை சேர்ந்த முருகன் 47, சம்பவ இடத்தில் பலியானார். ஸ்ரீவில்லிபுத்துார் அருகே எஸ். ராமலிங்கபுரத்தை சேர்ந்த 10 பேர் ஒரு வேனில் சாத்துாரில் நடந்த அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி பொதுக்கூட்டத்திற்கு நேற்று மதியம் சென்றனர். மதியம் 3:00 மணிக்கு கோடாங்கி பட்டி ஊருக்கு அருகில் செல்லும்போது வேன் கட்டுப்பாடு இழந்து, எதிரே வந்த டூவீலர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் டூவீலரில் வந்த சிவகாசி துரைச்சாமிபுரத்தை சேர்ந்த போட்டோகிராபர் முருகன் உயிரிழந்தார். வேனில் பயணித்த எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாள் 65, வள்ளியம்மாள் 60, மீனாட்சி 25, வேம்பு 70, கோமதி அம்மாள் 55, அன்னலட்சுமி 65, ராக்கப்பன் உட்பட 8 பேர் லேசான காயமடைந்தனர். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வன்னியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.