மேல்நிலை குடிநீர் தொட்டிகள் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம்
ஊராட்சிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பல மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் இவற்றின் மேல் பகுதியும் பக்கவாட்டு சுவர்களும் சேதமடைந்து விரிசல் விட்டு காணப்படுகின்றன.மேலும் துாண்களில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் செல்லரித்த நிலையில் காணப்படுகிறது. பல ஊராட்சிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அருகிலேயே வீடுகள் கட்டப்பட்டுள்ளன.சில மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு கீழே மாடு, ஆடுகள் போன்ற கால்நடைகளை மக்கள் வளர்க்கின்றனர். மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்ட பின்னர் அவற்றை பராமரிக்க தேவையான நிதியை ஊராட்சிகள் ஒதுக்குவது கிடையாது. பல இடங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த படிகள் சேதமடைந்து விட்ட நிலையில் மீண்டும் இரும்பு கம்பிகளால் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.சில இடங்களில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு மாற்றாக புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ள நிலையில் பழைய குடிநீர் தொட்டிகள் அகற்றப்படாமல் உள்ளன. இதற்கு அடியில் மக்கள் அமர்ந்து சீட்டு விளையாடுவது உறங்கி பொழுதுபோக்கும் இடமாகவும் சிறுவர்கள் விளையாடும் நிலை உள்ளது. இவ்வாறு பராமரிப்பு இல்லாத மேல்நிலை குடிநீர் தொட்டிகள் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.ரோட்டின் ஓரங்கள், பள்ளி குடியிருப்புப் பகுதி அருகிலும் சேதமடைந்த துாண்களுடன் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை அகற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகமும் முன் வராத நிலை உள்ளது.நிதி வசதி இல்லை என ஊராட்சி நிர்வாகம் பொறுப்பை தட்டிக் கழித்து வரும் நிலையில் ஊராட்சிகள் தோறும் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து இவற்றை பாதுகாப்பான முறையில் இடித்து அகற்ற தேவையான நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.