உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு உற்பத்தியை துவங்க உரிமையாளர்கள் தயக்கம்; ஆலைகளில் ஆய்வு செய்ய குழு அமைப்பால்

பட்டாசு உற்பத்தியை துவங்க உரிமையாளர்கள் தயக்கம்; ஆலைகளில் ஆய்வு செய்ய குழு அமைப்பால்

சிவகாசி: தீபாவளிக்கு உற்பத்தியாளர்கள், வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்பனையானதால், கார்த்திகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனைக்காக சிவகாசி பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி தொடங்கி உள்ளது. இந்நிலையில் தற்போதே ஆலைகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டதால் சிறு உற்பத்தியாளர்கள் ஆலைகளை திறக்க தயங்கி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர் சாத்தூர் வெம்பக்கோட்டை சுற்று பகுதிகளில் உள்ள 1080 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 350 க்கும் அதிகமான ரகங்களில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதம் அதிகமான பட்டாசுகள் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டாசு ஆலைகளில் பிப். முதல் ஜூலை வரை ஆப் சீசன் முறையிலும், ஆக., செப்.,, அக்., மாதங்களில் தீபாவளி சீசன் உற்பத்தியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி, உற்பத்தி குறைவு உள்ளிட்ட காரணங்களால் பேன்சி வகை பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தீபாவளிக்கு உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்பனையானது. இதனால் திருக்கார்த்திகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் வடமாநில பண்டிகைக்கு பேன்சி ரக பட்டாசுகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் தீபாவளி முடிந்த உடனேயே பட்டாசு உற்பத்திக்கு தேவையான அட்டை குழாய், திரி உள்ளிட்ட இணை தொழில்கள் உற்பத்தியை தொடங்கியது. அவ்வப்போது பெய்த மழையால் தாமதமான நிலையில் தற்போது நல்ல வெயில் அடிப்பதால் இப்பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தியை துவங்கியுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு சஸ்பென்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்க (டான்பாமா ) தலைவர் கணேசன் கூறுகையில்: இந்த ஆண்டு தீபாவளிக்கு உற்பத்தியாளர்கள், வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்பனையானது. காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்ய முடியவில்லை. தற்போது நல்ல வெயில் சூழல் நிலவுவதால் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தொடங்கி உள்ளது, என்றார். மீனம்பட்டி சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில்: ஆலைகளில் பட்டாசு தயாரிக்க துவங்குவதற்கு முன்பு ஆய்வுக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஆலைகளில் எதிர்பாராமல் சிறிய தவறு இருந்தாலும் உரிமத்தை ரத்து செய்து விடுகின்றனர். இதனால் பட்டாசு உற்பத்தியை துவக்குவதில் ஒரு சில உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை