காரியாபட்டியில் நெல், வெங்காய பயிர்கள் சேதம்
காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் பெய்த கனமழைக்கு வெங்காயம், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, முற்றிலும் சேதமடைந்ததால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். காரியாபட்டி பகுதியில் பாப்பனம், அரசகுளம், பெரிய ஆலங்குளம், எஸ்.மறைக்குளம், தேனூர், சூரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெங்காயம் பயிரிட்டனர். பயிர்கள் வளர்ந்து, களை எடுத்து, காய் பிடித்து, இன்னும் சில நாட்களில் வெங்காயம் பறிக்கும் பருவத்தில் இருந்தது. அதேபோல் சத்திர புளியங்குளம், முடுக்கன்குளம், எம். இலுப்பைகுளம், டி.வேப்பங்குளம், ஏ.தொட்டியங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டு கதிர் பிடித்து தை மாதம் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்தது. பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் வயல்கள், காடுகளில் மழை நீர் தேங்கி பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்ததால் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் கவலை அடைந்தனர். நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பாலன், விவசாயி, அரசகுளம்: இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. ஏராளமாக செலவு செய்து பருவத்திற்கு வந்த நிலையில் கனமழையால் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமானது. அதிக நஷ்டம் ஏற்பட்டதால் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. என்றார். முத்துச்செல்வம், விவசாயி, பாப்பனம்: தரிசுகளாக கிடந்த வயல்களை சுத்தம் செய்து ஏராளமானோர் நெல் விவசாயம் செய்தோம். நன்கு வளர்ந்து கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராக இருந்தது. கனமழை பெய்ததால் வயல்களில் மழை நீர் தேங்கி, பயிர்கள் சாய்ந்து, நீரில் மூழ்கியது. விளைந்த கதிர்கள் முளைத்து விடும் நிலை உள்ளது. ஏராளமாக செலவு செய்து, பாதிப்பை ஏற்படுத்தியதால், கவலையாக உள்ளது என்றார்.