கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விடாததால் கருகி வரும் நெற்பயிர்கள்
நரிக்குடி : நரிக்குடி கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விடாததால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். நரிக்குடி முழுக்க விவசாயம் சார்ந்த பகுதி. நீர் ஆதாரமாக இருப்பது கிருதுமால் நதி தான். வைகை ஆற்றில் வரும் தண்ணீரை பல்வேறு போராட்டங்களுக்குப் பின் பெறுவது தான் அப்பகுதி விவசாயிகளின் தீராத சோகமாக இருந்து வருகிறது. மழை அல்லது கிருதுமால் நதியில் கிடைக்கும் தண்ணீர் அப்பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் சென்று சேருவதைப் பொறுத்து நெல் பயிரிடுவர். இந்த ஆண்டு துவக்கத்தில் நல்ல மழை பெய்தது. இதனை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிடப்பட்டு, வளர்ந்து பால் பிடிக்கும் சமயத்தில் போதிய மழையில்லாமல் போனது. கண்மாயில் இருந்த தண்ணீரும் வற்றியது. தண்ணீரின்றி பயிர்கள் மெல்ல கருக துவங்கின. மற்ற பகுதிகளில் கனமழை பெய்தும் நரிக்குடி பகுதியில் சரிவர மழை இல்லாமல் போனது. மற்ற பகுதிகளில் பெய்த மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. சமீபத்தில் வைகை அணை திறக்கப்பட்டு பல்வேறு வரத்து கால்வாய்களுக்கு நீர் பங்கீடு செய்யப்பட்டது. கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விட வேண்டி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பல ஆயிரங்கள் செலவு செய்து பயிர்கள் கருகி வருவதால், வீணாகிவிடுமோ என விவசாயிகள் வேதனை அடைந்தனர். பயிரைக் காப்பாற்றுங்கள்
மச்சேஸ்வரன், மாநில துணைத்தலைவர், காவிரி, வைகை, குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு: நரிக்குடி பகுதியில் விவசாயம் நடைபெற கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிட்டனர். வளர்ந்து பால் பிடிக்கும் பருவத்தில் கண்மாயில் நீரின்றி போனது. பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தவியாய் தவித்து வருகின்றனர். வைகை ஆற்று தண்ணீரை பெற பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது. கருகி வரும் நெற்பயிரிகளை காப்பாற்ற கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு உள்ளோம். அதிகாரிகள் மனசு வைக்க வேண்டும் என்றார்.