உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ருசித்து சாப்பிட பாலவநத்தம் சீரணி

ருசித்து சாப்பிட பாலவநத்தம் சீரணி

உ ணவில் பல வகைகள் இருந்தாலும் இனிப்பு, காரத்திற்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மதுரை ஜிகர்தண்டா, சாத்துார் காரசேவு, ஸ்ரீவில்லிப்புத்துார் பால்கோவா, திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட உள்ளூர் பிரசித்தி பெற்ற உணவுகள் தற்போது வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு பகுதிகளிலும் பிரசித்தி பெற்ற உணவுகளை நேரடியாக வாங்கி அந்த இடத்தில் வைத்து உண்ணும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாது. இந்த பட்டியலில் சிறந்த இனிப்பு வகையாக விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் தயாரித்து விற்பனை செய்யப்படும் சீரணி மிட்டாய் 80 ஆண்டுகளாக பெயர் பெற்றுள்ளது. இந்த மிட்டாய் வகைக்கு மூலப்பொருளாக இருப்பது பச்சரிசியும், உருட்டு உளுந்து மட்டும். இவை இரண்டையும் முந்தைய நாள் தண்ணீரில் ஊறவைத்து மாவு ஆக்கிய பின் இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்க வேண்டும். இதை துணியில் நிரப்பி முறுக்கு சுற்றுவது போல சூடான சமையல் எண்ணெய்யில் பிழிந்து பொறிந்த பின் வெளியே எடுக்க வேண்டும். இதை தனியாக காய்ச்சிய கருப்பட்டி, மண்டவெல்லம் பாகுவில் முக்கி எடுத்தால் 'சீரணி' தயார். செம்பில் ஓட்டை போட்டு சீரணி மாவு அதில் நிரப்பி முறுக்கு போல சுற்றுவார்கள். இந்த முறையில் சுற்றுவதால் சீரணியில் கட்டி சேரும். ஆனால் துணியில் சுற்றும் போது கட்டி சேராமல் நன்றாக 'மொறு மொறு' தன்மையுடன் இருக்கும். விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்துார், காரியாபட்டி, அதனை சுற்றிய பகுதிகளில் பாலவநத்தம் சீரணி பிரபலமாக மாறுவதற்கு முக்கிய காரணம் தினசரி தயாரிக்கப்படுவதும், தயாரித்த சீரணி அன்றையே தினமே முழுவதும் விற்பனையாகி விடுவதுமாகும். மறுநாள் புதிதாக தயாரிப்பதால் மக்கள் பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். சீரணி தயாரிக்க கேஸ் அடுப்பு பயன்படுத்தாமல் முந்திரி தோடு, விறகு பயன்படுத்துவதால் தீ நின்று வெப்பம் சீராக கிடைத்து பழமையான ருசி மாறாமல் சீரணியை தயாரிக்க முடிகிறது. மேலும் மற்ற இனிப்பு வகைகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். ஆனால் சீரணியில் மண்டவெல்லம், கருப்பட்டி மட்டுமே பயன்படுத்துவதால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பி வாங்கி ருசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை