ஸ்ரீவி.,யில் மகனின் மரண மர்மம் 3 ஆண்டாக பரிதவிக்கும் பெற்றோர்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் தன்யா நகரில் வசித்து வருபவர் விஜய விநாயகம் 57, ஆடிட்டர். இவரது மனைவி சுரேகா 50. இத்தம்பதியின் 12 வயது மகன் சிவபிரசாத். லயன்ஸ் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் 2022ல் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வந்த நிலையில், ஜன. 22 காலை 10:45 மணிக்கு வீட்டின் நிலையில் சிவப்பிரசாத் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மாணவரின் பெற்றோர் தங்கள் மகன் இறப்பு, தற்கொலையாக இருக்காது. கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து போலீஸ், நீதிமன்றம், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் என பல்வேறு இடங்களில் புகார் அளித்து இன்று வரை விடை தெரியாமல் பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து தந்தை விஜய விநாயகம் கூறியதாவது; எங்கள் மகனின் இறப்பு தற்கொலையாக இருக்காது. கொலையாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்துார் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மறுவிசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் 3 ஆண்டுகளாக காவல்துறை மறுவிசாரணை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. உயர் நீதிமன்றம் தடய அறிவியல் ஆய்வகத்தில் அலைபேசி ஆய்வக அறிக்கையை பெற்று சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால், எனது மகனின் அலைபேசி பாஸ்வேர்ட் தெரியவில்லை எனக்கூறி தடய அறிவியல் ஆய்வுத் துறையும் கூறுகிறது. முதல்வர் தனிப்பிரிவு, தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., கலெக்டர், எஸ்.பி என அனைத்து அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எங்கள் புகார் குறித்து விசாரிக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து பரிதவித்து வருகிறோம். எங்கள் மகனின் இறப்பில் உண்மையை வெளிக்கொண்டு வர போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.