தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் கண்டித்து பெற்றோர் போராட்டம்
சேத்துார்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்துார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேத்துார் பேரூராட்சி காமராஜர் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்களும் 116 மாணவர்களும் உள்ளனர். பள்ளி வளாகத்தில் மழையால் தண்ணீர் தேங்கியது. தலைமை ஆசிரியர் ஜெயராம் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். சீரமைக்க வலியுறுத்தி அக். 14ல் மாணவர்கள் காலை உணவை புறக்கணித்தனர். பள்ளியில் வட்டார கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்காததற்காக ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவும், பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வலியுறுத்தியும் நேற்று பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசியதையடுத்து கலைந்து சென்றனர். சி.இ.ஓ., மதன்குமார் கூறியதாவது: அப்பள்ளியில் மழை நீர் தேங்கும் பிரச்னை காலை 10:30 மணிக்கு சரியாகிவிடும். இதை வைத்து அக். 14 காலை உணவு திட்டத்தை 110 மாணவர்களுக்கு தர மறுத்துள்ளார். சேத்துார் போலீஸ் எஸ்.ஐ., அறிவுறுத்தியும் கேட்கவில்லை. மாணவர்களின் காலை நேர பசி பாதுகாப்புக் கருதியும், அரசு திட்டத்தை செயல்படுத்தாத அடிப்படையிலும் ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், என்றார்.