ஸ்ரீவில்லிபுத்துார் -: கோவை - -மதுரை இன்டர்சிட்டி ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு கூடுதல் ரயில் சேவை கிடைக்கும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் மக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர். குறிப்பாக கோவையில் மிகவும் அதிகளவில் வசிக்கின்றனர்.இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்து செல்ல நாகர்கோவில் -- கோவை வழித்தடத்தில் ஒரேயொரு ரயில் மட்டுமே உள்ளது. இந்த ரயிலும் திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை வழியாக இயக்குகிறது. ஆனால் தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, திருத்தங்கல் வழியாக கோவைக்கு தினசரி ரயில் கிடையாது. இதனால் தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது மதுரையில் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:00 மணிக்கு கோவைக்கு சென்றடைந்து, மறுமார்க்கத்தில் கோவையில் மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு இரவு 7:30 மணிக்கு மதுரை வந்தடையும் வகையில் ஒரு இன்டர்சிட்டி ரயில் இயங்குகிறது.இதில் கோவையில் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் ரயிலை விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் வழியாகசெங்கோட்டைக்கு இரவு 12:00 மணிக்குள் சென்றடையும் வகையில் தட நீட்டிப்பு செய்து இயங்கவேண்டும். இதன் மூலம் மதுரை, விருதுநகர் மாவட்ட மக்கள் செங்கோட்டை செல்ல கூடுதல் ரயில் சேவையும் கிடைக்கும். மேலும் துாத்துக்குடியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பயணிக்க முடியும்.மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 7:00 மணிக்கு வந்து வழக்கம் போல் கோவைக்கு இயங்கவேண்டும்.இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.