| ADDED : டிச 06, 2025 05:12 AM
விருதுநகர்: விருதுநகரில் சிறு சிறு பள்ளங்களால் திணறடிக்கும் சிவகாசி ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன பழுதால் மக்கள் தவிக்கும் சூழல் உள்ளது. மாவட்டத்தின் தலைநகரில் ரோடு வசதிகள் மிக மோசமானதாக உள்ளது. நகரின் விரிவாக்கம் கைகூடாததாலும், நெடுஞ்சாலைத்துறை ரோடுகளை பாதாளசாக்கடை பணிக்காக தோண்டி சேதப்படுத்துவதாலும் மாவட்ட தலைநகருக்கு தகுதியற்றதாய் ரோடு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதனால் வெளியூரில் இருந்து விருதுநகர் வருவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் மழைக்காலத்தில் நடந்து வரும் பணிகளால் அடிக்கடி வழி மாற்றி விட்டு வாகன ஓட்டிகள் அல்லல்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் ஒரு பக்கம் ரோடு பணிகளை செய்கிறது. இன்னொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறையும் செய்கிறது. இந்நிலையில், எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து செல்லும் சிவகாசி ரோட்டிலும் தரைப்பால பணிகள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பால பணிகள் செய்யப்பட்டாலும், அதன் வடிகால்கள் யாவும், நகராட்சியால் துார்வாரப்படாமலே உள்ளன. இந்நிலையில், நடக்கும் தரைப்பால பணிகள், மழைநீர் வடிந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த சிவகாசி ரோட்டில் சிறு சிறு பள்ளங்கள் ஏராளம் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த ரோடு பிரதானமானதாக உள்ளதால் தினசரி வாகன போக்குவரத்து பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சிவகாசியின் பட்டாசு ஆலைகள், அச்சகங்களுக்கு செல்லும் லாரிகள் ஏராளம் செல்கின்றன. இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் இருபுறமும் மண்மேவி இருப்பதுடன், சென்டர் மீடியனில் மண் மேவி காணப்படுகிறது. இது இருபுறமும் செல்லும் டூவீலர் ஓட்டிகளை சறுக்கி விழச் செய்கிறது. மேலும் இந்த ரோட்டில் லாரிகள் போட்டி போட்டு முந்துவதால் மேவிய மண் புழுதியாக மாறுகிறது. சிறு சிறு பள்ளங்களில் ஏறி இறங்கும் வாகனங்களும் பழுதாகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் அல்லாடுகின்றனர். எனவே சிவகாசி ரோட்டை சீரமைத்து தர நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளங்களை சரி செய்ய வேண்டும் சென்டர் மீடியன்கள் அருகே மண்மேவி உள்ளது. இதனால் வலது புறம் முந்த முயற்சிப்போர் சறுக்கும் அபாயம் உள்ளது. அதே போல் ரோட்டின் ஓரங்களில் மேவிய மண்ணை லாரிகள் புழுதியாக்கி டூவீலர்களில் பின்னே செல்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ரோட்டின் பள்ளங்களை சரி செய்தால் நகர்ப்புறவாசிகள் பயன்பெறுவர். கனகராஜ், விருதுநகர். பேட்ஜ் பணிகள் அவசியம் டூவீலர்களில் இந்த ரோடு வழியாக செல்லும் போது சிறு சிறு பள்ளங்களால் பாதிப்பு ஏற்படுகிறது. அடிக்கடி பேட்ஜ் பணிகள் செய்தால் இந்த நிலை வராது. இது முக்கிய ரோடாக இருப்பதால் இந்த வழியை பயன்படுத்த வேண்டியுள்ளது. வயதானவர்கள் சென்றால் முதுகுவலியே வந்து விடும். எனவே இந்த ரோட்டை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரரசு, விருதுநகர்.