மல்லாங்கிணரில் வி.ஏ.ஓ., இல்லாததால் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் அவதி
காரியாபட்டி: மல்லாங்கிணரில் வி.ஏ.ஓ., பணியிடம் நிரப்பததால் மாணவர்கள் சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் மிகுந்த இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். விரைந்து நியமிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.மல்லாங்கிணர் வி.ஏ.ஓ., லஞ்ச வழக்கில் சிக்கினார். அதற்குப்பின் காலியாக இருந்த பணியிடத்திற்கு வரலொட்டி வி.ஏ.ஓ., வை கூடுதலாக கவனிக்க பணி அமர்த்தப்பட்டார். வரலொட்டியும் பெரிய ஊராக இருப்பதால்வி.ஏ.ஓ., எப்போதும் பிஸியாக இருப்பார். மல்லாங்கிணர் பகுதியை கூடுதலாக கவனிக்க முடியாமல் பணி சுமையால் திணறி வருகிறார். தற்போது பள்ளி திறக்க இருப்பதால் இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வாங்க மாணவர்கள் அலையாய் அலைகின்றனர். வி.ஏ.ஓ., சரிவர வராததால் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்லாங்கிணர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.