சேதமடைந்த பிளவக்கல் அணை பூங்கா விரைந்து சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைத்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட அரசு நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் பார்க்கின்றனர்.வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு அணை விருதுநகர் மாவட்ட மக்களின் விடுமுறை கால சுற்றுலா தலமாகும்.ஆனால் இங்குள்ள பூங்கா பல ஆண்டுகளாக சேதமடைந்து மக்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ளது.யானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறி கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையினர் மக்கள் சென்றுவர அனுமதி மறுத்துள்ளனர். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விருதுநகர் மாவட்ட மக்களின் சுற்றுலா தலமாக விளங்கிய பிளவக்கல் அணை பகுதி தற்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக காணப்படுகிறது. மலையடிவார விவசாயிகள் மட்டுமே அப்பகுதியில் நடமாடி வருகின்றனர். மாலை நேரங்களில் சமூகவிரோதிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.எனவே விளையாட்டு பூங்காவை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து கூடுதல் பஸ்கள் இயக்கி சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும் என விருதுநகர் மாவட்ட மக்கள் கோரி வந்தனர்.கடந்த ஆண்டு விருதுநகர் வந்த முதல்வர் ரூ.10 கோடியில் பிளவக்கல் அனைத்தும் சீரமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான திட்ட மதிப்பீடு பணிகளை பொதுப்பணித்துறையினர் செய்து அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.எனவே விரைந்து அனுமதியும், நிதி ஒதுக்கீடும் வழங்கி பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென விருதுநகர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.