கோடிக்கணக்கில் செலவளித்தும் பயன்படாத வாறுகால்கள் அல்லல்படும் அருப்புக்கோட்டை மக்கள்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் செய்யப்படும் வளர்ச்சி பணிகளில் வாறுகால் அமைத்தும் மழைநீர், கழிவுநீர் வெளியேற முடியாமல் மக்களை பாடாய் படுத்திய நிலையில் கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்தும் பயன் இல்லை.அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் ரோடுகள், வாறுகால்கள், பொது கழிப்பறைகள், பேவர் பிளாக் ரோடுகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செய்யப்படுகின்றன. இவற்றை செய்வதற்கு நகராட்சியில் பதிவு பெற்ற 10க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொது நிதியிலிருந்தும், அரசின் மூலம் ஒதுக்கப்படும் சிறப்பு நிதியின் மூலம் பணிகளை வழங்குகின்றனர்.குறிப்பிட்ட ஒரு சிலர் தான் நகர் முழுவதும் மெயின் வாறுகால் அமைப்பது, ரோடுகள் பேவர் பிளாக் கற்கள் பதிப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். ஒருவருக்கே கோடிக்கணக்கான ரூபாய் டெண்டர் வழங்கப்படுவதால் செய்யப்படும் பணிகளில் தரம் இல்லை. அருப்புக்கோட்டை பூக்கடை பஜாரில் ரூ.64 லட்சம் நிதியில் ரோட்டின் இருபுறமும் வாறுகால் அமைக்கும் பணி நடந்தது. இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக மழைக்காலத்தில் ரோடு வெள்ளத்தில் மிதப்பதால் இந்த பகுதி மக்கள் சிரமப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு புதியதாக வாறுகால் அமைக்கும் பணி செய்யப்பட்டது. முறையாக வாறுகால்களை தூர்வாரி கழிவுநீர் சீராக வெளியேறும் வகையில் பணிகளை செய்யாமல் தடுப்புச் சுவர் கட்டி ஏனோ தானோ என்று 'ஸ்லாப்' போட்டு மூடி விட்டனர். இதனால் மழை பெய்தால், பழையபடி பூக்கடை பஜார் மிதக்கிறது. செலவழித்த நிதியும் வீணானது. இதே போன்று நாடார் மயான ரோட்டில் முறையாக வாறுகால் அமைக்காததால் கழிவுநீர் தேங்கி இதற்கு செலவளிக்கப்பட்ட ரூ.50 லட்சம் நிதியும் வீணானது. இதை சரி செய்ய மேலும் ரூ.30 லட்சம் நிதியை நகராட்சி ஒதுக்கி உள்ளது. வாறுகால் பணி முடிந்து உடன் ரோடு அமைக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை முழுவதும் ஒரே ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி பணிகளை நகராட்சி பொறியாளர் அவ்வப்போது சென்று ஆய்வு செய்வதுமில்லை. அதற்கான அலுவலர்களும் கண்டு கொள்வது இல்லை. பல கோடி நிதியை செலவிட்டும் மக்களுக்கு எந்த வித பயனும் இன்றி வழக்கம் போல் பிரச்சனையை சந்தித்துக் கொண்டே உள்ளனர்.