உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அள்ள அள்ள மீண்டும் வரும் குப்பை; கவுசிகா நதி மீது வேண்டும் மக்கள் அக்கறை

அள்ள அள்ள மீண்டும் வரும் குப்பை; கவுசிகா நதி மீது வேண்டும் மக்கள் அக்கறை

விருதுநகர்: விருதுநகரில் பருவமழை பெய்து வருகிறது. கவுசிகா நதி மராமத்து பணியும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கவுசிகா நதியின் ஆத்துப்பாலத்தின் இடது ஓரத்தில் அள்ள அள்ள மீண்டும் மீண்டும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இது மராமத்து பணி செய்யும் நீர்வளத்துறையினருக்கு தலைவலியாக உள்ளது. கவுசிகா நதியை பராமரிக்க மக்களின் அக்கறையும் வேண்டும். குப்பையை கொட்டுவதை நிறுத்துவதுடன், உள்ளாட்சி நிர்வாகமும், குப்பையை பெற மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் அக். 17 முதல் 25 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.விருதுநகரில் கவுசிகா நதியை ரூ.20.44 கோடியில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி, வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளை ஆக. 5ல் அமைச்சர் தங்கம் தென்னரசு துவங்கி வைத்தார். கவுசிகா நதியில் 11.50 கி.மீ., வரையிலான நீளம் வரை துார்வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது.தடுப்பணை, குறுக்கு கட்டுமான பணிகளை புனரமைத்து தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும், நகரத்தில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் எங்கெல்லாம் கலக்கிறதோ அந்த இடங்களை கண்டறிந்து, 1.60 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் அமைத்து, நதியில் கலக்காமல் அதனை மீண்டும் மறுசுழற்சி செய்து, சுத்திகரிக்கும் பணிகளும் செய்யப்பட உள்ளன. இந்நிலையில் இந்த புனரமைக்கும் பணியில் ஆக்கிரமிப்பு அகற்றம் முழுமையாகவும், விரிவாகவும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இன்னொரு பக்கம் ஆத்துப்பாலத்தில் குப்பை அள்ள அள்ள மீண்டும் மீண்டும் அதே இடத்தில் குவிவது மற்றொரு பிரச்னையாக உள்ளது. ஆக்கிரமிப்பு பிரச்னையில் சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர். ஆனால் குப்பையை கட்டுப்படுத்த தான் வழியில்லை. அகற்றினாலும் மீண்டும் வந்து விடுகிறது. ஆத்துப்பாலத்தில் வலதுபுறம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. குப்பை குவியும் இடதுபுறமானது கூரைக்குண்டு ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. மீண்டும் மீண்டும் குப்பையை அகற்றி நீர்வளத்துறையினர் திண்டாடி போயுள்ளனர். தீபாவளி நான்கு நாள் விடுமுறை என்பதால் நேற்றும் முளைத்துள்ளது. இதை ஊராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும். மக்களும் கவுசிகா நதி மீதான அக்கறையோடு செயல்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி