தரமற்ற மாற்று பாதை சகதியானதால் மக்கள் அவதி
திருச்சுழி: திருச்சுழி அருகே ரோடு போடுவதற்காக அமைத்த மாற்றுப்பாதை தரமற்றும், சகதியாக போனதால் மக்கள் நடக்க முடியாமலும் வாகனங்கள் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர். திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எம். ரெட்டியபட்டி ஊராட்சியில் கமுதி விலக்கிலிருந்து 4 கி.மீ. துாரம் உள்ள மறவர் பெருங்குடி வரை புதிய ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணி முடியும் வரை மாற்றுப் பாதை அமைக்கப் பட்டுள்ளது. ஜல்லி, மண் ஆகியவற்றை பயன்படுத்தி அமைக்காமல், மண்ணை மட்டும் மேவி, ரோடு அமைத்துள்ளதால் மேடும் பள்ளமுமாக ஆகிவிட்டது. மழைக் காலத்தில் சேறும் சகதியுமாக நடந்து செல்ல முடியவில்லை வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்கின்றன. ஒரு மாத காலமாக இந்த ரோடு பணி நடந்து வருவதால் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ராமநாதபுரம், கமுதி, ராமசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த ரோடு வழியாக தான் பந்தல்குடி இருக்கன்குடி, தூத்துக்குடி செல்வர். ரோடு பணி முடியும் வரை போடப்பட்டுள்ள மாற்று பாதை தரமானதாக அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் தரமான மாற்று பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.