உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒரே நாளில் 10 அடி உயர்ந்த பிளவக்கல் பெரியாறு அணை; ஸ்ரீவில்லிபுத்துார் பேயனாற்றிலும் நீர்வரத்து

ஒரே நாளில் 10 அடி உயர்ந்த பிளவக்கல் பெரியாறு அணை; ஸ்ரீவில்லிபுத்துார் பேயனாற்றிலும் நீர்வரத்து

வத்திராயிருப்பு: பிளவக்கல் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஒரே நாளில் 10 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்து தற்போது 36.48 அடி உயரத்திற்கு நீர் மட்டம் உயர்ந்து அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பேயனாற்றிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மாலை 4:00 மணி முதல் நேற்று அதிகாலை வரை பெரியாறுஅணை நீர் பிடிப்பு பகுதியில் விட்டு விட்டு கன மழை பெய்தது. இதில் 52.2 மி.மீ. மழை பதிவான நிலையில் அணைக்கு வினாடிக்கு 649.73 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 47.56 அடி உயரமுள்ள அணையில் 36.48 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்தது. பொதுவாக அணையின் நீர்மட்டம் 40 அடியை தொடும்போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். தொடர்ந்து மழை பெய்தால் அணை நிரம்பும் நிலையை எட்டும் என்பதால் விரைவில் அணை திறக்க வாய்ப்புள்ளது. கோவிலாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் 44.6 மில்லி மீட்டர் மழை பெய்த நிலையில் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவாகவே காணப்பட்டது. 42.65 அடி உயரமுள்ள அணையில் தற்போது 11. 32 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. வத்திராயிருப்பில் 20 மி. மீ. மழை பெய்து பூமி குளிர்ந்து தற்போது கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று முன் தினம் மாலை 6:00 மணி முதல் நேற்று அதிகாலை வரை 32.8 மி. மீ. மழை பதிவானது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக பேயனாற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. மேலும் மம்சாபுரத்தில் உள்ள வாழைக்குளம், வேப்பங்குளம் உட்பட பல்வேறு கண்மாய்க்கு தண்ணீர் வரத்து ஏற்பட துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ