உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெளிநாட்டு பட்டாசுகள் பதுக்கல் , விற்பனை தகவல் தெரிவிக்க பெசோ அறிவுறுத்தல்

வெளிநாட்டு பட்டாசுகள் பதுக்கல் , விற்பனை தகவல் தெரிவிக்க பெசோ அறிவுறுத்தல்

சிவகாசி:வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பட்டாசுகள் குறித்து போலீசிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும் என மத்திய பெட்ரோலியம் , வெடிபொருள் பாதுகாப்பு துறை (பெசோ) அறிவுறுத்தியுள்ளது. சிவகாசி பகுதியில் உள்ள 1080 பட்டாசு ஆலைகளில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீரி அமைப்பின் வழிகாட்டுதலில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் மொத்த தேவையில் 95 சதவீதத்திற்கும் மேலான பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்பில்லாத பட்டாசுகள் குறைந்த விலைக்கு நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டதால் சிவகாசி பட்டாசு தொழில் நலிவடைந்து தொழிலாளர்கள் பாதிக்கபட்டனர். மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின்னர் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்யவும், இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது பொம்மை, விளையாட்டு உபகரணங்கள் என்ற பெயரில் பட்டாசுகள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் விற்பனைக்கு வருவதால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டு பட்டாசு குறித்து 'பெசோ' வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :இந்தியாவில் தவறான அறிவிப்புகளின் கீழ் கடந்த காலங்களில் வெளிநாட்டு பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அதன்பின் இறக்குமதி தடை விதிக்கப்பட்ட பட்டியலில் பட்டாசுகள் சேர்க்கப்பட்டது. பட்டாசுகளை இறக்குமதி செய்யவோ, இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவோ அனுமதி கிடையாது. வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்படும் பட்டாசுகளில் முக்கிய மூலப் பொருளாக உள்ள பொட்டாசியம் குளோரேட் என்ற வேதிப்பொருள் விரைவில் வெடிக்கும் தன்மையுடன், சுற்றுச்சூழல் ,சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தும் தன்மையுடையது. இதனால் மனித உயிர்கள், சொத்துக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பட்டாசுகளை வைத்திருத்தல்,விற்பனை செய்தல் குறித்து அறிந்தால் அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !