பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா சீரமைத்தல் பணி தீவிரம்
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான பிளவக்கல் பெரியாறு அணையில் சேதமடைந்துள்ள பூங்காவை ரூ.10 கோடியில் சீரமைப்பதற்கான பணிகள் குறித்த திட்ட மதிப்பீடுகளை பொதுப்பணித்துறையினர் தயார் செய்து அரசின் அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அனுமதி கிடைத்தவுடன் விரைவில் சீரமைப்பு பணிகள் துவங்கும்வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு அணை, மாவட்ட மக்களின் விடுமுறை கால சுற்றுலா தலமாகும். ஆனால் இங்கு அமைக்கப்பட்டிருந்த பூங்காவில் இருந்த விளையாட்டு பொருட்கள் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. மேலும் யானைகள் நடமாட்டம் இருந்ததால் மக்களை அனுமதிக்க வனத்துறை அனுமதி மறுத்தது. இதனால் 5 ஆண்டுகளாக மேலாக பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்து காணப்பட்டது.பூங்காவை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென விருதுநகர் மாவட்ட மக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்நிலையில் 2024 நவ.ல் விருதுநகர் வந்த முதல்வர், பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா ரூ.10 கோடியில் சீரமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான திட்ட மதிப்பீடு பணிகளை பொதுப்பணித் துறையினர் செய்து வந்தனர்.இதன்படி கிழவன் கோவிலில் இருந்து பெரியாறு அணை வரை தார் ரோடு அமைத்தல், சுகாதார வளாகம் அமைத்தல், பூங்காவில் நவீன விளையாட்டு கருவிகள் பொருத்துதல், 7 ஏக்கர் பரப்பளவிற்கு காம்பவுண்ட் சுவர் கட்டுதல், வனத்துறை நிலத்தில் யானைகள் வருவதை தடுக்கும் விதத்தில் அகழி வெட்டுதல் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்தல் குறித்த திட்ட மதிப்பீடுகளை பொதுப்பணித்துறையினர் தயார் செய்து அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளனர்.விரைவில் அரசின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.