போலீஸ் செய்தி
பணி செய்ய விடாமல் எஸ்.ஐ.,யை தடுத்தவர்கள் மீது வழக்கு சாத்துார்: இருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலரின் நடவடிக்கையால் நத்தத்துப்பட்டி பஞ்சாயத்திற்கு வருவாய் இழப்பும் கிராம மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக கூறி பி.எம்.டி இயக்கம் சார்பில் மாரிமுத்து என்பவர் நத்தத்துப்பட்டியில் டிச. 28 ல் உண்ணாவிரதம் இருக்க போலீசிடம் அனுமதி கேட்டிருந்தார். அவரிடம் சாத்துார் டி.எஸ்.பி. நாகராஜன் அனுமதி மறுத்த நோட்டீைஸ வழங்குவதற்காக எஸ்.ஐ., முத்துராஜ், போலீசார் அய்யனார், பாலமுருகன், வி.ஏ.ஓ. திருப்பதி ஆகியோர் அவர் வீட்டிற்கு சென்றனர். நோட்டீசை அவர் வாங்க மறுத்தார். இதனால் மாரிமுத்து வீட்டில் நோட்டீசை எஸ்.ஐ., ஒட்ட முயன்றார். அப்போது செல்லமுத்து, மாரிமுத்து ,நாராயணமூர்த்தி, ராஜா, மற்றும் சிலர் அதிகாரிகளை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தனர்.அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பள்ளி மாணவர் தற்கொலை விருதுநகர்: விருதுநகர் ஆர்.எஸ்., நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரின் மகன் விஸ்வ பாண்டி 15. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதில் மன வருத்தமடைந்து நேற்று வீட்டின் கபோர்டு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மேலும் சத்தம் வராமல் இருக்க வாயில் செல்லோ டேப் ஒட்டியும், இரு கால்களையும் கட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இவரின் உடலை மீட்ட விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். கண்மாயில் மிதந்த தொழிலாளி உடல் அருப்புக்கோட்டை: அருப்புகோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி தெய்வேந்திரன், 54, இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. ஊருக்கு அருகில் உள்ள கண்மாயில் அவரின் டூவீலர் நின்று கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை கண்மாயில் தெய்வேந்திரன் மிதந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். யாசகர் பலி சாத்துார்: சாத்துார் பத்திரகாளியம்மன் கோயில் அருகில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க யாசகர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை தடம் தொண்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாரிக்கண்ணன் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.அவர் பெயர் வைத்தீஸ்வரன் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். போலீஸ்காரர் காயம் சாத்துார்: சாத்துார் அழகாபுரியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் 39. நகர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்து வருகிறார். டிச. 9ல் இருசக்கர வாகனத்தில் காலை 8:00 மணிக்கு பணிக்கு வந்த போது ரங்கப்ப நாயக்கன்பட்டி விலக்கில் எதிரில் வந்த அயன் சல்வார் பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் ஓட்டி வந்த லோடு ஆட்டோ டூவீலர் மீது மோதியதில் காயமடைந்தார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.