கடையம் கைதி ஓட்டம் எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்
விருதுநகர்: கேரள மாநிலம் வையூர் மத்திய சிறை கைதி பாலமுருகனை 30, திருட்டு வழக்கு ஒன்றில் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் அழைத்து சென்ற போது தப்பி ஓடினார். இதையடுத்து பாதுகாப்புக்கு சென்ற பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ., நாகராஜன், ஏட்டுக்கள் ரவிஜோதி, சுதாகர் ஆகியோரை விருதுநகர் எஸ்.பி., கண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருட்டு வழக்கில் தற்போது கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வையூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நவ.,3 அழைத்து வந்தனர். இவரை மீண்டும் வையூர் மத்திய சிறையில் ஒப்படைக்க பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ., நாகராஜன், ஏட்டுக்கள் ரவிஜோதி, சுதாகர் ஆகியோர் காரில் அழைத்து சென்றனர். வழியில் இயற்கை உபாதை கழிப்பதாக கூறி இறங்கிய பாலமுருகன் தப்பியோடினார். அவரை போலீசார் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வையூர் போலீஸ் ஸ்டேஷனில் பாலமுருகனை கண்டுப்பிடித்து கொடுக்க புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது. பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக எஸ்.எஸ்.ஐ., நாகராஜன், ஏட்டுக்கள் ரவிஜோதி, சுதாகரை எஸ்.பி., கண்ணன் சஸ்பெண்ட் செய்தார்.