குரூப் 4 தேர்வு வெற்றி பெற்றும் பணியிடம் கிடைக்காமல் அல்லல் வருவாய்த்துறை அலட்சியத்தால் தவிப்பில் வருங்கால டைப்பிஸ்ட்டுகள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றும் பணியிடம் கிடைக்காமல், 12 வருங்கால டைப்பிஸ்ட்டுகள் அவதிப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் 12 டைப்பிஸ்ட்டுகள் காலிப்பணியிடங்கள் இருந்ததால், குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அதை தேர்வு செய்தனர். பணி ஆணையோடு மாவட்டத்திற்கு வந்த பின் தான், இப்பணியிடங்கள் அனைத்தும் மறுசீராய்வு செய்யப்பட்டு இளநிலை உதவியாளர்களாக நிரப்பப்பட்ட விவரம் தெரிந்தது. குரூப் 4 வெற்றி பெற்றவர்களுக்கு 2025 ஜன. ல் பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது வரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை. ஏன் என கலெக்டர் அலுவலகம் வந்து விசாரித்தனர். அப்போது பணியிடங்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.இதை தொடர்ந்து மாவட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதில் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகான பதவி உயர்வுகளால் 2024ல் 12 இளநிலை உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட்டு விட்டது, 11 டைப்பிஸ்ட் பணியிடங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்ற தகவலை ஆறு மாத காலத்திற்கு முன்பே அரசுக்கு கடிதங்களாக அனுப்பிவிட்டதாகவும். ஆனால் பழைய காலியிட எண்ணிக்கை அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்து மாவட்டத்திற்கு அனுப்பி உள்ளதாகவும், இங்கு காலிப்பணியிடங்கள் எதுவும் இல்லை. வருவாய் நிர்வாகத்துறை தான் வேறு மாவட்டங்களுக்கு இவர்களை அனுப்ப வேண்டும் அல்லது புதிய பணியிடங்களை தோற்றுவித்து அரசு ஆணையிட வேண்டும் என கூறினர். தேர்வில் வெற்றி பெற்ற பின்னும் பணியிடம் கிடைக்காமல் அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். வருவாய்த்துறையின் தகவல் அளிப்பதில் ஏற்பட்ட அலட்சியம் தான் இதற்கு காரணமாக உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.