ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி: நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜர் 150 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்துார்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் ஆஜரான அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டோருக்கு 150 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சாத்துாரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி அ.தி.மு.க., நிர்வாகி விஜய நல்லதம்பி, ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக 2021ல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் செய்தார். அதனடிப்படையில் விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது நண்பர்கள் முத்துப்பாண்டி, மாரியப்பன், பாண்டியராஜன், ரவி கணேசன், ராம கிருஷ்ணன், நாகேஷா ஆகியோர் மீது ஒரு வழக்கும், ராஜேந்திர பாலாஜி பணம் பெற்று தன்னை ஏமாற்றியதாக விஜய் நல்ல தம்பி கொடுத்த புகாரில் ராஜேந்திர பாலாஜி, அவரது நண்பர்கள் பாபுராஜ், பலராமன், பாண்டியராஜன், ரவி கணேசன், ராமகிருஷ்ணன், நாகேஷா ஆகியோர் மீதும் மற்றொரு வழக்கும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர். இவ்வழக்குகள் ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கின்றன. நேற்று இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்த போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட குற்றம்சாட்டப்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். நீதிபதி ஜெயக்குமார் உத்தரவின்படி அவர்களுக்கு 150 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டன. வழக்கு விசாரணையை அக்., 10க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.