சிவகாசியில் ரத வீதிகள், என்.ஆர்.கே.ஆர்., ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகாசி: சிவகாசியில் மாநகராட்சி சார்பில் ரத வீதிகள், என்.ஆர்.கே.ஆர்., ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.சிவகாசி தேரடி முக்கில் சிவன், முருகன், கருப்பசாமி, கடை கோயில், பெருமாள் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. கோயில்களின் நான்கு ரத வீதிகள், என்.ஆர்.கே.ஆர்., ரோட்டில் தள்ளுவண்டி கடைகள், கட்டடங்கள் உள்பட பல்வேறு கடைகள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இதனால் கோயில்களுக்கு வருகின்ற பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் ரத வீதிகளில் டூவீலர்களே சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கமிஷனர் சரவணன், மாநகர திட்டமிடுநர் மதியழகன், நகர அமைப்பு ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. . இப்பகுதியில் அவ்வப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றினாலும் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்கதையாகவே உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி மீண்டும் ஆக்கிரமிப்பு நிகழாமல் இருக்க நடவடிக்கை வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி : சிவகாசி மாநகராட்சியின் புதிய கமிஷனராக சரவணன் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து நகரின் ஆக்கிரமிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அகற்றி வருகிறார். மாநகராட்சி முழுவதும் பாரபட்சம் இன்றி இதேபோல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.