உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விளை பொருட்களைக் கொண்டு செல்வதற்காக விவசாயிகள் அமைத்த ஓடு பாலம் அகற்றம்

விளை பொருட்களைக் கொண்டு செல்வதற்காக விவசாயிகள் அமைத்த ஓடு பாலம் அகற்றம்

ராஜபாளையம் : ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றை கடந்து விளைபொருட்களை கொண்டு செல்ல விவசாயிகளாக அமைத்த சிறிய ஓடு பாலத்தை அகற்றிய வி.ஏ.ஓ.,வின் செயலால் இப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு அருகே எஸ் வளைவு அமைந்துள்ளது. இப்பகுதி ஆற்றின் வடக்கே ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான தென்னை, மா, பலா தோப்புகள், கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை தோட்டங்கள் எள், உளுந்து போன்ற எண்ணெய் வித்து பயிர்கள் காய்கறி தோட்டங்கள் என சாகுபடி பகுதிகள் உள்ளன.இந்நிலையில் ஆற்றின் தொடக்கப்பகுதி அருகே உள்ளதால் மறுகரையில் இருந்து சுமார் 160 அடி அகலம் உள்ள ஆற்றை கடந்து வருவதற்கு வருடத்தில் இரண்டு முதல் மூன்று மாதங்கள் நீர் வரத்தும் சிறிய பாறைகளும் அடைத்து தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆற்றின் இரண்டு கரை ஓரங்களிலும் தலா 15 அடி துாரத்திற்கு விவசாயிகளாக சேர்ந்து டிராக்டர் கடந்து செல்லும் அளவிற்கு ஓடு பாலத்தை அமைத்தனர். இந்நிலையில் இப்பகுதி வி.ஏ.ஓ., பாலா, விவசாயிகளுக்கு எந்த வித தகவலும் தெரிவிக்காமல் பாலத்தை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளார். இதனருகே 300 மீட்டர் தொலைவில் விதிகளை மீறி விவசாய பயன்பாடு என்ற பெயரில் உள்ள கட்டடங்களுக்கு நீர்வழியை கடந்து செல்ல தடை ஏற்படுத்தியதை கண்டு கொள்ளாதது குறித்தும் விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

விவசாயிகள் பாதிப்பு

ராமச்சந்திர ராஜா, மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்: நீர்வழிப்பாதையை கடந்து செல்ல ஆற்றின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் மட்டும் போட்ட ஓடு பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் அக்கறையை மீறி அகற்ற வேண்டிய அவசியம் என்ன. அகற்றிய கழிவுகளையும் பாறைகளை குவித்து அதன்மேல் தடை ஏற்படுத்தி சென்றுள்ளார். இதன் அருகே முழு அளவில் நீர்வரத்துக்கு தடை ஏற்படுத்தி வரும் பகுதியை விட்டு சிறு விவசாயிகளை வஞ்சிப்பது நியாயமல்ல. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தாசில்தாரிடம் அனுமதி

பாலா, வி.ஏ.ஓ.,: ஆற்றின் இந்த பகுதியில் தண்ணீர் அதிகம் வராது. இருப்பினும் அனுமதியின்றி ஓடு பாலம் போட்டவர்கள் யார் என விசாரித்து வருகிறேன். இதன் அருகே உள்ள ஓடு பாலம் வனப்பகுதியில் உள்ளது. எனவே அது குறித்து ஒன்றும் கூற முடியாது. தாசில்தாரின் அனுமதியுடன் தான் அகற்றினேன்.

விசாரிக்கிறேன்

ராமசுப்ரமணியன், தாசில்தார், ராஜபாளையம்: ஆற்றில் ஓடு பாலத்தை அமைக்க யாரும் விவசாயிகளுக்கு அனுமதி தரவில்லை. யாருடைய அனுமதியுடன் அகற்றினார் என்பது குறித்து வி.ஏ.ஓ.,விடம் விசாரிக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !