உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவக்கல்லுாரியில் தண்ணீர் பற்றாக்குறையால் குடியிருப்புகள் காலி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை

அரசு மருத்துவக்கல்லுாரியில் தண்ணீர் பற்றாக்குறையால் குடியிருப்புகள் காலி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் உள்ள அலுவலர்களுக்கான குடியிருப்புகள் தண்ணீர் பற்றாக்குறையால் காலியாகவே உள்ளது. இந்த பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு மருத்துவக்கல்லுாரியில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், அலுவலர்களுக்கான 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளில் கல்லுாரி திறக்கப்பட்ட நாள் முதல் யாரும் வசிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் பிரச்சனை. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வழங்கப்படும் குடிநீர் அரசு மருத்துவக்கல்லுாரி கட்டடம், மாணவர்கள் விடுதியில் உள்ள டேங்கில் ஏற்றியவுடன் நின்று விடுகிறது.இதனால் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், அலுவலர்களுக்கான குடியிருப்புகள், முதல்வர் குடியிருப்புக்கு தேவையான தண்ணீர் தினமும் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி மூலமாக தேவைக்கு ஏற்ப வாங்கப்படுகிறது. ஆனால் தண்ணீர் பிரச்னை இருப்பதால் டாக்டர்கள், அலுவலர்கள் பெரும்பாலும் குடியிருப்புகளில் தங்குவதற்கு முன்வராமல் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பயன்படுத்தப்படாமல் பாழாகும் நிலை உள்ளது.இது குறித்து மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் பலமுறை நடவடிக்கை எடுத்தும் துறை சார்ந்த அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே அரசு மருத்துவக்கல்லுாரியில் உள்ள தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !