பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம், குடிநீர் பற்றாக்குறை பரிதவிப்பில் பாவாலி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு வாசிகள்
விருதுநகர் : திறந்தும் பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம், 15 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை, ரோடுகள் சேதம், பாழாகும் பூங்கா உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர் விருதுநகர் பாவாலி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி குடியிருப்போர்.இது குறித்து குடியிருப்போர் சுந்தரமூர்த்தி, சின்னகாந்தி, ராமமூர்த்தி, ஆதவன் வடிவேல், நாகராஜன் கூறியதாவது:விருதுநகர் ஒன்றியம் பாவாலி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதே போன்று 3 சுகாதார வளாகங்கள் செயல்பாட்டிற்கு வராமல் கடந்த 3 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் திறந்த வெளி கழிப்பிடங்கள் அதிகரித்து சுகாதாரக்கேடு உண்டாகி வருகிறது.மேலும் காலனியில் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பூங்கா பொருட்கள் துருப்பிடித்து, வளாகத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து பாழாகும் நிலையில் உள்ளது.இப்பகுதியில் ஜல் ஜீவனில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.தெருக்களில் ரோடுகள் முறையாக அமைக்கப்படாமல் மண்ரோடாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகி ரோட்டில் மக்கள் நடந்து கூட செல்ல முடிவதில்லை. ஊராட்சியின் எல்கையில் உள்ள நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் குப்பை, கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.அய்யனார்நகர் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து போதைக்கு அடிமையானவர்களின் தொல்லயால் மக்கள் அமைதி கெடுகிறது. பாவாலி கண்மாய் மடைகள், நீர்வரத்து ஓடைகள், கரைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் 12 ஆண்டுகளாக விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை நீடிக்கிறது. மழையின் போது தண்ணீர் தேங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊருணியின் கரைகள் சேதமாகியுள்ளது. இக்கரைகளை சீரமைத்து ஊருணியில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.