கவுன்சிலிங் முடிந்து 35 நாளாகியும் ஆர்.எம்.ஓ., பணி ஆணை இழுத்தடிப்பு
விருதுநகர்:அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆர்.எம்.ஓ., (நிலைய மருத்துவ அலுவலர்) பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப ஜூலை 29ல் கவுன்சிலிங் நடந்தது. இதில் 8 பேர் ஆர்.எம்.ஓ., பணியிடங்களை தேர்வு செய்தனர். கவுன்சிலிங் முடிந்து 35 நாட்களை கடந்தும் இதுவரை பணி ஆணை வழங்காததால் பதவி ஏற்பதில் இழுபறி நீடிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக ஆர்.எம்.ஓ., உதவி ஆர்.எம்.ஓ., பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கவுன்சிலிங் மூலமாக மட்டுமே நிரப்பப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., முடித்து அரசு மருத்துவராக 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு ஆர்.எம்.ஓ., பணியிடங்கள் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு முதலில் உதவி ஆர்.எம்.ஓ., ஆக பணிபுரிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி ஜூலை 29ல் நடந்த கவுன்சிலிங்கில் 15 பேர் பங்கேற்றனர். இதில் 8 பேர் சிவகங்கை, நாமக்கல், திருச்சி, கன்னியாகுமரி, ஓட்டேரி, சென்னை, வேலுார் ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆர்.எம்.ஓ., பணியிடங்களை தேர்வு செய்தனர். கவுன்சிலிங் முடிந்து ஒரு வாரத்தில் பணி ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது 35 நாட்களை கடந்தும் இதுவரை பணி ஆணை வழங்கப்படவில்லை. இதனால் அரசு மருத்துவமனைகளில் அன்றாட பணிகளை பொறுப்பு அதிகாரிகளை வைத்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் புதிய ஆர்.எம்.ஓ.,க்கள் பதவி ஏற்பதில் இழுபறி நீடிக்கிறது.