வெள்ள நீரால் ரோடு துண்டிப்பு-- தற்காலிக தீர்வுக்கு எதிர்பார்ப்பு
தளவாய்புரம்: செட்டியார்பட்டி அருகே மெயின் ரோட்டில் வெள்ள நீரால் சாலை துண்டிக்கப்பட்டு 15 கி.மீ., சுற்றி செல்ல வேண்டியுள்ளதால் தற்காலிக பாதை அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செட்டியார்பட்டி அடுத்த முகவூர் சொக்கநாதன் புத்துார் மெயின் ரோட்டில் முகவூர் கண்மாய் உபரிநீர் வெளியேரும் ஓடை தரைப்பாலம் உள்ளது. மழை நேரத்தில் வாகனங்கள் கடக்கும் போது பாதுகாப்பு கருதி மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் சாஸ்தா கோயில் அணை பெருகி முகவூர் கண்மாய் அதிக நீர் வரத்தால் பாதுகாப்பு கருதி ஷட்டர்கள் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பாதை வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் முகவூர், முத்துச்சாமிபுரம் செட்டியார்பட்டி, சொக்கநாதன் புத்துார், மேலுார் துரைசாமிபுரம் என இரண்டு பக்கமும் உள்ள கிராமத்தினர் நுாற்றுக்கணக்கான பாசன விவசாயிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் தென்காசி தேசிய நெடுஞ்சாலை வழியே 15 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் தற்காலிக பாதைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.