உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை, இருள் சூழ்ந்த தெருக்கள்

ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை, இருள் சூழ்ந்த தெருக்கள்

சிவகாசி : தெருக்களில் ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை என சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சி பாலாஜி நகர் பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.இதுகுறித்து பாலாஜி நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் குருவம்மாள், வேலம்மாள், பொன்னுத்தாய், ராமானுஜம் அம்மாள் கூறியதாவது, பூலாவூரணி ஊராட்சி பாலாஜி நகரில் அனைத்து தெருக்களிலுமே இதுவரையிலும் ரோடு அமைக்கப்படவில்லை. ஒரே ஒரு தெருவில் போடப்பட்ட ரோடும் சேதம் அடைந்துள்ளது. வாறுகால் வசதியும் இல்லாததால் கழிவு நீர் ரோட்டிலேயே தேங்குகின்றது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி தெரு முழுவதுமே சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. தவிர மழைநீர் குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து விடுகின்றது. மூன்றாவது தெருவில் தனிநபர் பாதையை ஆக்கிரமித்து உள்ளதால் இப்பகுதி மக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்பட வேண்டியுள்ளது. பெரும்பான்மையான தெருக்களில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவில் நடமாட மக்கள் அச்சப்படுகின்றனர். காலி இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்து இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்புப் பகுதியில் நடமாடுகின்றது. எனவே காலி மனைகளில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாஜி நகருக்கு வரும் மெயின் ரோடு சேதம் அடைந்திருப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இப்பகுதியில் அனைத்து தெருக்களிலுமே குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. பத்து நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீர் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. புழக்கத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.தவிர குப்பை சேகரிக்க ஆட்கள் வராததால், ரோட்டிலேயே குப்பைகளை கொட்ட வேண்டியுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !