சாத்துார் மெயின்ரோட்டில் தேங்கும் கழிவுநீர்
சாத்துார்: சாத்துார் மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சாத்துார் நகராட்சியில் மெயின் ரோட்டில் இருபுறமும் புதியதாக வாறுகால் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த வாறுகால் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் மெயின் ரோட்டில் வாறுகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி ரோட்டில் தேங்கி வருகிறது.இது வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் இந்த பகுதியில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கழிவு நீரில் கால் வைத்து நடந்து செல்ல வேண்டி இருப்பதால் வாடிக்கையாளர்கள் இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வர தயங்கும் நிலை உள்ளது. மேலும் இங்கு வங்கியும் லாட்ஜூம் செயல்பட்டு வருகிறது.வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புதியதாக கட்டப்பட்ட வாறுகாலில் மண் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் இதிலிருந்து கழிவு நீர் ரோட்டிற்கு பாய்ந்து குளம் போல் தேங்கி நிற்கிறது.இதில் உற்பத்தியாகும் கொசுவால் கொசுக்கடிக்கு ஆளாகி வியாபாரிகளும் மக்களும்அவதிப்படுகின்றனர். நகராட்சி பணியாளர்கள் இந்த பகுதியில் ப்ளீச்சிங் பவுடர் தெளித்துவிட்டு செல்கின்றனர். வாறுகாலில் உள்ள மண்ணை அகற்றி கழிவுநீர் செல்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தாது மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்காத வகையில் வாறுகாலில் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்வலியுறுத்தி உள்ளனர்.