காரியாபட்டியில் கூரை இடிந்து விழும் அச்சத்தில் கடை உரிமையாளர்கள்
காரியாபட்டி; காரியாபட்டியில் இடிந்து விழுந்த வணிக வளாகம் கூரையால் கடை நடத்தி வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர். விபத்திற்கு முன் அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் மதுரை - அருப்புக்கோட்டை ரோட்டில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சரிவர கட்டாததால் கட்டடம் சேதம் அடைந்தது. கடை நடத்துபவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அதற்குப் பின் வேறு வழியின்றி சொந்த நிதியில் பராமரிப்பு செய்து வாடகைக்கு இருந்து வருகின்றனர். அப்படி இருந்தும் வெயில், மழைக்கு கட்டடத்தின் உறுதித் தன்மை குறைந்து, படுமோசமாக மாறி உள்ளது.லேசான அதிர்வு ஏற்பட்டால் கூட கூரை இடிந்து விழுகிறது. விபத்து அபாயம் உள்ளது. எப்போது கட்டடம் முழுவதும் இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் கடை நடத்துபவர்கள் இருந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்திற்கு முன் கட்டடத்தை அப்புறப்படுத்தி, நவீன முறையில் தரமான, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகைக்கு கடை நடத்தி வருபவர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.