மேலும் செய்திகள்
ராஜபாளையம் கண்மாய் கரையில் மருத்துவ கழிவுகள்
22-Mar-2025
ராஜபாளையம்: வரத்து கால்வாயில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள், குடியிருப்பு கழிவுநீர் கலப்பு, புதர் மண்டிய மடைகள், மண் அள்ளிய பள்ளங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவற்றால் ராஜபாளையம் ஆதுரி கண்மாய் பாசன விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலப் பாட்ட கரிசல்குளம் ஊராட்சியில் ஆதுரி கண்மாய் உள்ளது. முதல் மழைக்கே தண்ணீர் தேங்கி நீரோட்ட செழிப்பால் நெல், கரும்பு, வாழை என சாகுபடி இருந்து வருகிறது. விவசாயப் பகுதியாக இருந்த இப்பகுதியை சுற்றி தென்றல் நகர் அதை ஒட்டிய குடியிருப்புகள் அதிகரித்து வருவதால் விவசாய நிலங்கள் வகைப்பாடு மாற்றப்பட்டு தண்ணீர் வரத்திற்கும் விளை நிலங்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இக் கண்மாயிலிருந்து வெளியேறும் நீர் புளியங்குளம், பிரண்டைகுளம் கண்மாய்களுக்கு செல்ல வேண்டும். அதற்கான வடிகால் புதர் மண்டி உள்ளது. அணைத்தலை ஆற்றில் இருந்து நீர்வரத்து பெற்று சங்கிலி தொடர் வழியாக தண்ணீர் செல்லும் இப்பகுதி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் நீரோடைகள் கழிவு நீர் கலக்கப்படுகிறது.விவசாயிகள் போர்வையில் மண் அள்ளப்பட்டு ஆங்காங்கு ஏற்படும் குழி பாசனத்திற்கு கலுங்கு வழியே பாய முடியாமல் பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இது தவிர குடியிருப்புகளின் கழிவுநீரும் சுலபமாக நீர்வரத்து ஓடைகளில் இணைக்கப்படுவதால் விளை நிலங்களுக்கு பாய வேண்டிய தண்ணீர் அசுத்தமாகி பாதிப்பு ஏற்படுகிறது. மடைகள் பராமரிக்க வேண்டும்
கருப்பையா, ராஜபாளையம்: வருடம் ஒரு முறை பயன்படுத்தப்படும் மடையை முழுமையாக பராமரிப்பிற்கு கொண்டு வர வேண்டும். அவசர காலங்களில் சுலபமாக திறந்து மூடும் வகையில் கண்காணிப்பு மேற்கொள்வதோடு மடையை தாண்டி தண்ணீர் செல்ல முடியாத அவலம் உள்ளது. கண்மாயை துார்வாரவும் கரைகளை பலப்படுத்தவும், மடைகளை பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீரால் மாசு
சிவசக்தி, ராஜபாளையம்: பல தலைமுறைகளாக கழிவு என்பதை காணாமல் சுத்தமாக இருந்த இக்கண்மாய் தற்போது குடியிருப்புகளால் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால் நீர் ஆதாரம் பாழ் பட்டுள்ளதுடன் இதிலிருந்து செல்லும் நீரால் அடுத்த குளங்களும் கழிவு நீரால் பாதிக்கப்படுகிறது. தனி மனிதர்களுக்கான பொறுப்பை விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அரசு இது குறித்து கண்காணிப்பை மேற்கொள்வதுடன் அமலைச் செடிகளை அகற்றி பராமரிக்க வேண்டும்.
22-Mar-2025