உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆனைக்குட்டம் அணையில் ஷட்டர் பணி நிறைவு

ஆனைக்குட்டம் அணையில் ஷட்டர் பணி நிறைவு

சிவகாசி: சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணையில் ஷட்டர்கள் அமைக்கும் பணி முழுமை அடைந்த நிலையில், கரைகளை பலப்படுத்தவும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ரூ. 10 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணை 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 27 அடி உயரம் கொண்ட அணையில் 9 மதகுகள் உள்ளது. திருத்தங்கல், செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், முதலிப்பட்டி, வாடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3003 ஹெக்டர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியாக உள்ளது. இதனை நம்பி நெல், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு ஹெக்டர் பாசன வசதி கூட இல்லை. மேலும் விருதுநகர், திருத்தங்கல் நகரங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் எவ்வளவு மழை பெய்தாலும் இதுவரையிலும் அணை நிரம்பியது இல்லை. மழையால் தண்ணீர் வந்தவுடன் மதகுகளில் ஷட்டர் பழுதால் தண்ணீர்வீணாக வெளியேறிவிடும். மேலும் அணை பலவீனமாக இருப்பதால் கடந்த காலங்களில் 18 அடி உயரம் வரை தண்ணீர் வந்ததும் அதனை தேக்க முடியாமல் அணையின் பாதுகாப்பு கருதி வீணாக வெளியேற்றப்பட்டது. எனவே அணை பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஷட்டர் பழுது, அணையின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். பொதுப்பணி துறையினர் அணையினை பலப்படுத்தவும் 9 ஷட்டர்களையும் எடுத்துவிட்டு நவீன முறையில் புதிய ஷட்டர்களை அமைக்கவும் பரிந்துரைத்தனர். ஆறு மாதங்களுக்கு முன்பு நவீன முறையில் ஷட்டர்கள் அமைப்பதற்காக ரூ. 49 கோடி பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ. 28 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஷட்டர்கள் டிசைன் செய்யப்படும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் புதிய ஷட்டர்கள் அணைக்கு கொண்டு வரப்பட்டு அமைக்கும் பணி தீவிரமாக நடந்த நிலையில் பணி முழுமையாக முடிந்தது. அடுத்த மழைக்காலங்களில் அணைக்கு தண்ணீர் வந்த பின்னர் சோதனை மேற்கொள்ளப்படும். இந்நிலையில் அணையில் கரைகளை பலப்படுத்துவதற்கும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் ரூ. 10 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து உதவி பொறியாளர் பால மணிகண்டன் கூறுகையில், அணையில் ஷட்டர்கள்அமைக்கும் பணி முழுமையாக முடிந்துவிட்டது. மழை பெய்யும் போது சோதனை மேற்கொள்ளப்படும். தற்போது கரைகளைபலப்படுத்துவதற்கும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் ரூ. 10 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை