சேத்துார் பிராவடி ஆற்றில் மண் அரிப்பு விளை நிலம் பாதிப்பு
சேத்துார்: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சேத்துார் பிராவடி ஆற்றில் மண் அரிப்பால் விவசாய நிலங்களில் மரங்கள் வேருடன் பாதிக்கிறது. வெள்ள தடுப்புச் சுவர் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்துாரில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பிராவடி ஆற்றின் மூலம் நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மலையில் இருந்து மூன்று கி.மீ., அடுத்து தொடங்கும் ஆற்றின் மூலம் பல்வேறு கண்மாய்கள் நீர் ஆதாரம் பெற்று வருகிறது. இந்நிலையில் ஆற்றை கடக்கும் பகுதிகளிலும், அதனை ஒட்டியும் கடந்து செல்வதற்காக பாலங்கள், பக்கவாட்டு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விவசாய பகுதியை அடையும் ஆற்றின் முக்கிய வளைவு பகுதிகளில் வெள்ளத் தடுப்பு சுவர் இல்லாததால் விவசாய விளை நிலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பலன் தரும் மரங்கள் வேருடன் சாய்ந்து சேதம் ஏற்படுகிறது. ஆற்றில் வெள்ள நீரின் போது இதன் வேகம் அதிகரிப்பால் இதன் போக்கு அடிக்கடி சேதத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து விவசாயிகள் தரப்பில்: சாலை ஒட்டிய பகுதியில் மட்டும் பக்கவாட்டு சுவர் பலமாக அமைந்துள்ளனர். குடிநீருக்கான உரை கிணறு அமைந்துள்ள பகுதியை அடுத்துள்ள வளைவுகளில் தண்ணீரின் வேகத்தால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 30 வருட மா மரம் உள்ளிட்டவை சேதம் ஏற்பட்டு நிற்கிறது. பொதுப்பணித்துறையினர் வளைவு பகுதிகளில் கண்காணித்து தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.