ஆண்டாள் கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய கடையை இடித்த ஸ்ரீவி., நகராட்சி அதிகாரிகள்
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய கடையை நகராட்சி அதிகாரிகள் இடித்தனர். அப்போது கோயில், நகராட்சி அதிகாரிகளுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஸ்ரீவில்லிபுத்துார் கீழரத வீதியில் இருந்து அரங்கநாத பெருமாள் கோயிலுக்கு செல்லும் தெரு நுழைவுப் பகுதியில் ஒரு டீக்கடை 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இதற்கு நகராட்சி நிர்வாகம் வாடகை வசூலித்து வந்தது.2002ல் கடை இருந்த தெரு, கோயிலுக்கு சொந்தமானது எனக்கூறி நகராட்சி நிர்வாகம், கடை நடத்திய வீரபுத்திரன் ஆகியோருக்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோயில் நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதனை எதிர்த்து நகராட்சி நிர்வாகம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதிலும் ஆண்டாள் கோயிலுக்கு ஆதரவாகவே தீர்ப்பு கிடைத்தது.அதையும் எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி நிர்வாகம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தது. அதில் 2024 டிசம்பர் 31க்குள் கடையை காலி செய்து கோயில் நிர்வாகத்திடம் நகராட்சி ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி கடந்த மாதம் கோயில் நிர்வாகம் கடையை பூட்டி சீல் வைத்து தங்கள் வசம் கையகப்படுத்தியது.இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நகராட்சி நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று மதியம் 3:00 மணிக்கு மணல் அள்ளும் இயந்திரம் மூலம் கடை முன் பகுதியை இடித்தனர்.கோயில் கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள் மற்றும் ஊழியர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். டவுன் போலீசார் அதிகாரிகளை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து கடையை இடிப்பதை நிறுத்திய நகராட்சி அதிகாரிகள் திரும்பி சென்றனர்.நகராட்சி நகர அமைப்பு அலுவலர் வெங்கடேஷ், ''உயர்நீதிமன்ற உத்தரவின்படி தான் கடையை இடித்தோம்,'' என்றார்.கோயில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள், ''இதுகுறித்து தங்கள் துறை மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.